![]() |
| அசத்தறாங்கப்பா பசங்க… மீண்டும் 10 விக்கெட்டில் இந்திய அணி வெற்றி |
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில், ஜிம்பாப்வே அணியை வென்றதுடன், தொடர்ந்து, இரண்டு ஆட்டங்களில், 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணி புரிந்துள்ளது. நியூசிலாந்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. பி பிரிவில் உள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் பப்புவா நியூ குய்னா அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஏற்கனவே காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் மீண்டும் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது, கோச் ராகுல் டிராவிட் பயிற்சி அளிக்கும் இந்திய கிரிக்கெட் அணி. இதன் மூலம், 2008ல் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி என்ற இங்கிலாந்தின் சாதனையை இந்திய அணி சமன் செய்தது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி, 48.1 ஓவர்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து, 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. அனுகுல் ராய் 20 ரன்களுக்கு 4 விக்கெட்களையும், அபிஷேக் சர்மா 22 ரன்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அடுத்த 7 விக்கெட்களையும், 44 ரன்களுக்கு இழந்தது. மூன்று முறை சாம்பியனான இந்திய அணி, 21.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது. ஹார்விக் தேசாய் 73 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். ஷப்னம் கில், 59 பந்துகளில், 90 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம், பி பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்திய அணி, கால் இறுதியில், வங்கதேச அணியுடன் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

Post a Comment