ஈ.பி.டி.பி மத்தியில் அதிருப்தி -ஆனோல்ட் மேஜராவது சந்தேகம்- - Yarl Voice ஈ.பி.டி.பி மத்தியில் அதிருப்தி -ஆனோல்ட் மேஜராவது சந்தேகம்- - Yarl Voice

ஈ.பி.டி.பி மத்தியில் அதிருப்தி -ஆனோல்ட் மேஜராவது சந்தேகம்-

யாழ்.மாநகர சபை முதல்வராக ஆனோல்ட்டை நிறுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ள நிலையில் அவர் முதல்வராவதில் தற்போது நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.

யாழ்.மாநகரசபைக்கான தேர்தலில் எந்தக் கட்சியும் ஆட்சியமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையை பெறாத நிலையில் அதிக ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்.மாநகர சபைக்கான ஆட்சியை தாம் கோருவோம் எனத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி யாழ்.மாட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  தலைவர்களுக்கு இடையிலான  கூட்டத்தில்  யாழ்.மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.

குறித்த கூட்டத்தின் முடிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்   பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மாநகர சபையில் அதிக உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அங்கு நிர்வாக ஆட்சி அமைக்கும் என்றும்  கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடைய ஏகமனதான தீர்மானத்தின்படி இமானுவேல் ஆனோல்டை முதல்வராகவும் ஈசனை உப முதல்வராகவும்  நியமிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு அமைய ஆனோல்ட் முதல்வராவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

யாழ்.மாநகர சபையில் 10 ஆசனங்களை பெற்று ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக காணப்படும் ஈ.பி.டி.பி சார்பில் தெரிவான உறுப்பினர்கள் மத்தியில் ஆனோல்ட் முதல்வராவதில்   அதிருப்தி நிலை காணப்படுகின்றது.
ஈ.பி.டி.பி சார்பில் தெரிவான பெரும்பான்மையான உறுப்பினர்கள்  ஆனோல்ட் மாநகர சபை முதல்வராக வருவதை விரும்பாத நிலையே தொடர்வதாக அக் கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

இது தொடர்பில் அக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டபோது,
யாழ். மாநாகர சபையில் ஆட்சியமைக்கும் தரப்புக்கு நாம் அவர்களில் செயற்பாட்டை பொறுத்து ஆதரவு கொடுப்பதாக ஏற்கனவே கருத்தை வெளிப்படுத்தியிருந்தோம்.

ஆனாலும் எமது கட்சி சார்பில் மாநகரசபைக்குத் தெரிவான உறுப்பினர்கள் மத்தியில் கூட்டமைப்பால் முடிவு செய்யப்பட்டு மாநகர சபை முதல்வாரா பிரேரிக்கப்பட்டுள்ள இமானுவேல் ஆனோல்ட்டின்  தெரிவு தொடர்பில் நம்பிக்கையீனமும் அதிருப்தியும் காணப்படுகின்றது.

இந்நிலையில்  யாழ்.மாநகர சபை முதல்வர் வேட்பாளர் தெரிவின் போது உறுப்பினர்களின் சுதந்திரத்துக்கமைய இரகசிய வாக்கெடுப்புக்கு விடுவதா?  கட்சி கூடி ஒரு தீர்மானத்துக்கு வருவதா? என்பது தொடர்பில் விரைவில் தீர்மானிப்போம் என்றார்.

இந்நிலையில் கூட்டமைப்பின் உயர் மட்டத் தலைவர்கள் யாழ். முhநகர சபையில் கூட்டமைப்பு நிர்வாக ஆட்சியை அமைக்கும் எனவும் இதற்கு ஈ.பி.டி.பி. வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதாக கருத்தை வெளியிட்டிருப்பதாகவும் அது தொடர்பில் முடிவாக எதையும் வெளிப்படுத்த முடியாது என்று ஈ.பி.டி.பி வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதற்கு சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்திவருகின்றனர்.

ஆனால் கூட்டமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர்களான சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈ.பி.டி.பி கட்சியின் கொள்கை வேறு எமது கொள்கை வேறு ஒருபோதும் ஈ.பி.டி.பி கட்சியின் தயவில் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கப்போவதில்லை எனவும் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்களுடன் இணைந்து ஆட்சி அமைப்பதறகென்ற பேச்சுக்கே இடமில்லையென கடுமையான கருத்துக்களை ஈ.பிடி.பிக்கு எதிராக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஈ.பி.டி.பி சார்பில் தெரிவான உறுப்பினர்களின் ஆனோல்ட் மீதான  அதிருப்தி ஒருபுறம் கூட்டமைப்பின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் ஈ.பி.டி.பி தொடர்பான கடுமையான கருத்துக்கள் யாழ்.மாநகர சபையில் ஆனோல்ட் முதல்வராவதில் பெரும் சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post