![]() |
வங்கி ஊழல் குறித்து மத்திய அரசு விசாரணை தேவை - புதுச்சேரி முதல்வர் |
‘பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற ஊழல் குறித்து மத்திய அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்’ என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழிலதிபர் நீரவ் மோடி ரூ. 11,400 கோடி அளவிற்கு முறைகேடு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. வங்கிகளின் பல்வேறு கெடுபிடிகளை தாண்டி இந்த ஊழல் நடைபெற்றிருப்பது நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இது நாட்டின் மிகப்பெரிய ஊழலாகும்.
மத்திய அரசு இதுதொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்த வேண்டும்.
மேலும் இதில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்தால் அம்மாநில முதல்வர் சித்தராமையாவை எதிர்ப்பேன். அவரிடம், மாநிலத்தின் உரிமையை கேட்பேன்.
2 தினங்களுக்கு முன்பு அரசின் சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் பணிபுரியும் ஊழியர்கள் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் கலந்துகொண்டு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை இழிவுபடுத்தி, தரம் தாழ்ந்து பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தரம் தாழ்த்தி பேசியதற்கு அவர் பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவராக இருக்க தகுதியற்றவர் சாமிநாதன் என்றார் நாராயணசாமி.
Post a Comment