எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்குவதற்கு, மூன்றாம் தரப்பு நடுநிலையைத் தமிழர்கள் கோருகின்றனர் எனத் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“இந்தத் தீர்மானத்துக்கு வரும் எந்தவொரு அணியுடனும் நாங்கள் நிச்சயமாக இணைவோம். எந்தவொரு தீர்வும் தெற்கில் இருந்தே வர வேண்டும். சட்டபூர்வமாக எங்களுக்கு என்ன தேவை என்று மட்டும் நாங்கள் கேட்கலாம்.
இந்திய – இலங்கை உடன்பாட்டில், 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக எங்களின் சார்பாக இந்தியா கையெழுத்திட்டது. இந்தியா எமது நெருங்கிய அயல் நாடு. இந்தியா நடுநிலையாளராக வந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.
வடக்கு, கிழக்கு மக்களுக்குத் தவறு செய்திருக்கின்றோம் என்பதை தெற்கில் உள்ளோர் உணர்ந்து கொண்டு ஒரு தீர்வுக்கு வர வேண்டும். எங்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும், நாம் ஏற்றுக்கொள்ளக் கூடிய இறுதித் தீர்வை வழங்கக் கூடிய எவரையும் நாங்கள் ஆதரிப்போம்.
ஆனால், வெறும் சொற்களால் அளிக்கப்படும் வாக்குறுதிகளை ஏற்க முடியாது. ஒரு புரிந்துணர்வுக்கு வர மூன்றாவது தரப்பு எமக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். நான் எந்தச் சமூகத்துக்கும் எதிரானவன் அல்லன்.
நான் ஒரு நீதிபதியாக இருந்தேன். அரசியலில் ஈடுபடவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் ஒரு முகாமை ஆதரிப்பதில் எனக்கு சிரமம் இல்லை. ஆயினும், எனது கட்சி உறுப்பினர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிக்கலாம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment