புதிய ஐனாதிபதி கோத்தபாயவிற்கு கொழும்பு மாநகர பெண் முதல்வர் விடுத்துள்ள எச்சரிக்கை
பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கொழும்பு மாநகரசபையை கலைக்க ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென மாநகரசபையின் முதல்வர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுப்பார் என தான் ஒருபோதும் நம்பப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். கொழும்பு மாநகரசபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று மேயர் ரோஸி சேனாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர் கொழும்பு மாநாகரசபை எல்லையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கேள்விகோரல் தொடர்பாக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எம். நவ்பர் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து கொழும்பு மாநகர சபை மேயர் ஆசனத்தையும் கைப்பற்ற அல்லது விசேட ஆணையாளருக்கு கீழ் இதனை கொண்டுவர சதித்திட்டங்கள் இடம்பெறுவதாக அறியக்கிடைக்கின்றது. இதுதொடர்பாக அவதானமாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டார்.
இதனையடுத்து கருத்து தெரிவித்த முதல்வர் ரோசி சேனாநாயக்க கேள்விகோரலின்போது அரச அதிகாரிகள் சட்டத்துக்கு முரணாக செயற்பட்டுள்ளார்களா என தேடிப்பார்க்க 5 பேர் கொண்ட குழுவை நியமிக்கின்றேன்.
விசாரணை அறிக்கையில் அதிகாரிகள் தவறு செய்திருப்பது உறுதியானால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

Post a Comment