பகல் - இரவு டெஸ்ட் போட்டிகள் இனி பல மைதானங்களில் இந்தியாவில் நடாத்த ஏற்பாடு - கங்குலி - Yarl Voice பகல் - இரவு டெஸ்ட் போட்டிகள் இனி பல மைதானங்களில் இந்தியாவில் நடாத்த ஏற்பாடு - கங்குலி - Yarl Voice

பகல் - இரவு டெஸ்ட் போட்டிகள் இனி பல மைதானங்களில் இந்தியாவில் நடாத்த ஏற்பாடு - கங்குலி


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக கங்குலி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இந்திய அணி பகல்- இரவு டெஸ்டில் விளையாடியது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த மாதம் நடந்த இந்த இளம் சிவப்பு நிற பந்து (பிங்க்) டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியது.

இந்தியாவில் பகல்- இரவு டெஸ்ட் நடந்த முதல் மைதானம் என்ற பெருமையை கொல்கத்தா ஈடன்கார்டன் பெற்றது.

இந்த நிலையில் மும்பை பெங்களூர் குஜராத் ஆகிய 3 இடங்களில் பகல் - இரவு டெஸ்ட் வரும் காலங்களில் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கொல்கத்தாவில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்டை ஏராளமான ரசிகர்கள் ரசித்தனர். 2 மணி நேரத்தில் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. ரசிகர்களின் பேராதரவால் இது வெற்றியாக முடிந்தது.

கொல்கத்தாவில் நடந்தது போல இனிவரும் காலங்களில் மும்பை பெங்களூர் குஜராத் ஆகிய இடங்களில் பகல்-இரவு டெஸ்ட் நடத்தப்படும். இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் ஒரு போட்டி பகல்-இரவாக நடத்தப்படலாம்.

20 ஓவர் ஐ.பி.எல். தாக்கத்தால் டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்கள் வருகை பாதிக்கப்பட்டது. தற்போது பகல்-இரவாக நடத்தப்பட்டதால் டெஸ்ட்டை பார்க்க அதிகமான ரசிகர்கள் வருகிறார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து உள்பட 4 நாடுகள் பங்கேற்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை நடத்துவது பரிசீலினையில் உள்ளது. 4-வது நாடு எது என்பது தற்போது தெரியாது அந்த நேரத்தில் முடிவு செய்யபடும். வலிமையான அணியை தான் தேர்வு செய்வோம்.

கிரிக்கெட்டை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதே எங்களது அடிப்படை நோக்கமாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பையில் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post