கட்சி விதிகளை மீறிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் பதவி பறிக்கப்படும் - துரைராஐசிங்கம் - Yarl Voice கட்சி விதிகளை மீறிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் பதவி பறிக்கப்படும் - துரைராஐசிங்கம் - Yarl Voice

கட்சி விதிகளை மீறிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் பதவி பறிக்கப்படும் - துரைராஐசிங்கம்


கட்சி ஒழுக்கவிதிகளை மீறிச் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சிக்கு எதிராக செயற்பட்டுவரும் உறுப்பினர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் இருந்து கொண்டே கட்சிக்கு எதிராகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் உட்பட உள்ளூராட்சிமன்றங்களின் உறுப்பினர்கள் எழுவர் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அங்கத்தவர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அவர் சார்ந்திருந்த கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி அவர் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அவர் விலக்கப்பட்ட கையோடு அவரின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான கடிதங்கள் அவருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதுஇ தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரின் நடவடிக்கையைத் தொடர்ந்து அவரின் வெற்றிடத்திற்குப் புதியவர் நியமிக்கப்படுவார்.

இதேபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்ட யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளரான பிலிப் பற்றிக் ரோசன் என்பவர் மீதும் அவர் சார்ந்திருந்த கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் தெரியப்படுத்தியமைக்கு அமைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அவர் விலக்கப்பட்டதன் பேரில்இ அவரின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான கடிதங்கள் அவருக்கும்இ உரிய தெரிவத்தாட்சி அலுவலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து அவரின் வெற்றிடத்திற்குப் புதியவர் நியமிக்கப்படுவார்.

அத்தோடுஇ மேற்குறித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான இரா.அசோக் யூசைமுத்து பிலிப் மற்றும் மண்முனைப் பற்றுப் பிரதேச சபையின் உறுப்பினர் தோமஸ் சுரேந்தர் மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர்களான வ.சந்திரவர்ணன் சி.சிவானந்தன் போன்றோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக அவர்கள் சார்ந்த கட்சித் தலைமையின் நடவடிக்கை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைக்குரிய கடிதங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர்களது பதில்களுக்கு அமைய அவர்களது உள்ளூராட்சி மன்றப் பிரதிநித்துவங்களும் இழக்கச் செய்து அவர்களின் வெற்றிடத்திற்காகப் புதியவர்கள் நியமனம் செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அத்துடன்இ மேற்படி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் கந்தசாமி கோணேஸ்வரநாதன் என்பவரின் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்புரிமை நீக்கப்படுவதோடு அவரின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இது தொடர்பிலான கடிதங்கள் அவருக்கும் உரிய தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் திணைக்களத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவரின் வெற்றிடத்தை நிரப்பும் முகமாக புதிய உறுப்பினர் நியமிக்கப்படுவார். அத்துடன் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினரான குஞ்சித்தம்பி ஏகாம்பரநாதன் மீதான ஜனாதிபதித் தேர்தல் விடயம் உட்பட கட்சி ஒழுக்கவிதி மீறல் குற்றங்களின் அடிப்படையில் அவர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமை மற்றும் பொறுப்புக்கள்இ பதிவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேற்படி நடவடிக்கைகள் உரிய பிரதிநிதிகளின் கட்சித் தலைமைகளின் ஆலோசனைகள் மற்றும் முடிவுகளின் அடிப்படையிலும் கடந்த வாரம் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமையவுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்றே கடந்த வாரங்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணைந்து கொண்ட கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பா.முரளிதரனின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதித்துவமும் இழக்கச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post