துமிந்தவிற்கு பொது மன்னிப்பை வழங்க அரசு தீவிர முயற்சி - ஹிருணிகா குற்றச்சாட்டு
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சில குரல் பதிவுகள் வெளியாகியிருப்பதுடன் அந்தக் குரல் பதிவுகளின் மூலம் எனது தேவைக்காகவோ அல்லது ரஞ்சன் ராமநாயக்கவின் தேவைக்காகவோ துமிந்த சில்வாவிற்கு தண்டனை வழங்கப்பட்டது போன்றும் உண்மையில் அவர் மிகவும் அப்பாவி போன்றதுமான தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவையனைத்தும் துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்குவதற்கான ஆரம்பகட்டமாக நடவடிக்கைகளாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர சந்தேகம் வெளியிட்டார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சில குரல் பதிவுகள் வெளியாகிஇ அவை தற்போது பேசுபொருளாகியுள்ளன. எனது தந்தையாரின் கொலையாளியான துமிந்த சில்வா உள்ளிட்ட மூவருக்கு ஏற்கனவே மரணதண்டனை வழங்கப்பட்டு அது உயர்நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அவ்வாறிருக்க தற்போது வெளியான குரல் பதிவுகளின் தொடர்ச்சியாக துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவது குறித்தும் பேசப்பட்டு வருகிறது.
உண்மையில் எனது தந்தையாரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா உள்ளிட்ட மூவர் மீதும் அச்சுறுத்துதல்இ கொலைக்கான முயற்சி கொலை உள்ளடங்கலாக 17 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
அதேபோன்று மஹிந்தானந்த அளுத்கமகே ரோஹித அபேகுணவர்தன போன்றவர்கள் கடந்த காலத்தில் துமிந்த சில்வாவை போதைப்பெருள் விற்பனைக்காரன் என்று மிகமோசமாக விமர்சித்ததுடன் மாத்திரமல்லாமல் கொழும்பில் மஹிந்த ராஜபக்ஷவின் நீலக்கொடியை ஏற்றுவதற்கு எனது தந்தை மாத்திரமே இருந்தார் என்றும் பாராட்டியிருக்கிறார்கள்.
ஆனால் தற்போது அவர்களே துமிந்த சில்வா நல்லவர் என்றும் எனது கோரிக்கைகளுக்கு அமைவாகவே அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்றார்.
Post a Comment