தமிழக சட்டசபையில் இன்று 2020- 2021-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இது ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10-வது பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கடந்த வருட வரவு- செலவுத் திட்டத்தில் நான் அறிவித்ததின்படி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (எல்.ஐ.சி.) இணைந்து வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்துக் குடும்பங்களும் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள 'புரட்சித்தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கான' வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இயற்கை மரணங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும்.
விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும். விபத்தினால் நிரந்தர ஊனமுற்றோருக்கு உதவித் தொகை ரூ.2 லட்சம் வரை கணிசமாக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாத நபர்களுக்காகஇ தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் விபத்து நிவாரணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். உழவர் பாதுகாப்புத் திட்டம் 2020- 21-ம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.200.82 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் பொதுப்போக்குவரத்து கழகங்கள் சராசரியாக 6.58 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட 19496 பஸ்களை தினசரி இயக்கி வருகின்றன. போக்குவரத்துக் கழகப் பஸ்களின் இயக்கச் செயல்பாட்டுத் திறன் குறியீடுகள் தொடர்ந்து மேம்பட்டு வருவதுடன் எரிபொருள் இயக்கத்திறனும் ஒரு லிட்டருக்கு 5.34 கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது.
விபத்து விகிதமும் ஒரு லட்சம் கிலோ மீட்டர் இயக்கத்திற்கு 0.12 என்ற அளவிற்கு குறைந்துள்ளது.
பஸ் கட்டணங்களை குறைந்த அளவில் வைத்திருப்பதுடன் போக்குவரத்துக் கழகங்களின் இயக்கச் செயல் திறனையும் நிதி நிலையையும் மேம்படுத்தி பொதுப்போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் இந்த அரசு உறுதியுடன் உள்ளது.
ரூ.1580 கோடி மதிப்பிலான பாரத் ஸ்டேஜ்-வி.ஐ. தரம் கொண்ட 2213 புதிய பஸ்களை வாங்குவதற்கு ஏதுவாக ஜெர்மன் வளர்ச்சி வங்கியிடமிருந்து முதற்கட்ட நிதியுதவி பெறுவதற்கான திட்ட ஒப்பந்தம் 2019 செப்டம்பர் மாதம் 26-ந்தேதி கையெழுத்திடப்பட்டது.
இந்த திட்டத்தினைச் செயல்படுத்த 2020-21-ம் நிதியாண்டிற்கான வரவு- செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.960 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் 525 மின்சார பஸ்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளும் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளன.
உயர்தரமான பொது போக்குவரத்து பொது நன்மை அளிக்கும் என்பதை நன்கு உணர்ந்த இந்த அரசு அதை செம்மையாக இயக்குவதற்கு அரசின் உதவி தேவை என்பதையும் நன்று அறிந்துள்ளது. டீசல் விலை உயர்வினால் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினை ஈடு செய்ய 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.298 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2019-20-ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டணமில்லா பயண அட்டைகள் வழங்கும் திட்டத்தால் ஜனவரி 2020 வரை ஏற்பட்ட செலவினை ஈடுசெய்ய ரூ.1050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் நாள் வரை ஓய்வுபெற்ற ஊழியர்கள் பெற வேண்டிய ஓய்வு காலப் பலன்களை வழங்கிட 2019-20-ம் ஆண்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு குறுகிய காலக்கடனாக வழங்க ரூ.1093 கோடி ஒதக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கேமரா
பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நிர்பயா நிதியத்தின் மூலம் ரூ.75.02 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து பஸ்களிலும் பொருத்தப்படும்.
அனைத்து பஸ்களிலும் பணமில்லாப் பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் வகையில் மின்னணு பயணச் சீட்டு முறையை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.2716.26 கோடி போக்குவரத்து துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment