அரசியலில் திருகுதாளங்களை செய்கிறார் சுமந்திரன் - புதிய கூட்டணியால் அச்சம் - அருந்தவபாலன் குற்றச்சாட்டு - Yarl Voice அரசியலில் திருகுதாளங்களை செய்கிறார் சுமந்திரன் - புதிய கூட்டணியால் அச்சம் - அருந்தவபாலன் குற்றச்சாட்டு - Yarl Voice

அரசியலில் திருகுதாளங்களை செய்கிறார் சுமந்திரன் - புதிய கூட்டணியால் அச்சம் - அருந்தவபாலன் குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் அதன் வெளிப்பாடாகே அரசியல் திருகுதாளங்களைச் செய்கின்ற கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் விமர்சனங்களை முன்வைத்த வருகின்றார் என்றார்.

விக்கினேஸ்வரன் தலைமையிலான அணி தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

எமது அணி தொடர்பில் கூட்டமைப்பினர் கூறிவருகின்ற விடயங்களில் இதில் ஒரு விசயத்தை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். விக்கினேஸ்வரன் ஐயாவின் தலைமையின் கீழான இந்த அரசியல் முன்னெடுப்பு என்பது ஏற்கனவே இருந்து வந்த பல்வேறு சுயநலன்களை அனுபவித்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு போட்டியானது என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிற ஒரு விசயம்.

அவர்கள் நீண்ட காலமாக மக்களை ஏமாற்றி தங்களுடைய பதவி சுகங்களை அனுபவித்து வந்தவர்கள். அதை தொடர்ந்து தக்க வைக்க விரும்புகின்றார்கள் என்பது உண்மை. அவ்வாறு தொடர்ந்து அனுபவித்த சலுகைகளும் பதவிகளும் பறிபோவதை அவர்களின் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான் உண்மை. அதன் காரணமாகவே அவர்கள் விக்கினெஸ்வரன் ஐயா தலைமையிலான அணியை அல்லது அவரைப் பற்றி விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள்.

உண்மையில் கூட்டமைப்பிற்கு எங்களுடைய அணி எந்த வகையிலான சவாலும் விடாது அல்லது போட்டியாக இருக்காது என்றால் எங்கள் அணியைப் பற்றிக் கதைக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் எங்களுடைய அணியைக் கண்டு பயப்பிடுகிறார்கள். அந்தப் பயத்தின் வெளிப்பாடு தான் சுமந்திரனோ அல்லது அந்தக் கட்சி சார்ந்தவர்களோ சொல்கின்ற விசயங்களாக இருக்கின்றது.

இதில் குறிப்பாக சுமந்திரன் சொல்கின்ற விசயங்கள் அனைவருக்கும் தெரியும் தானே. அவர் இங்க ஒன்று அங்க ஒன்று காலையில் ஒன்று மாலையில் ஒன்று என்று பல வகையில் அரசியில் திருகுதாளங்களை எல்லாம் செய்வது வழக்கம். அந்த வகையில் அவர் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார். ஆகையினால் அவர்களுடைய அந்த விமர்சனங்களை பெரிதாக எடுக்கத் தேவையில்லை.

இன்றைக்கு கூட்டமைப்பின் மீது அவர்களுடைய செயற்பாடுகள் மீதும் மக்கள் பெருமளவிற்கு வெறுப்புற்று விரக்தியுற்று இருக்கின்றார்கள் என்பது தான் உண்மை. அந்த வகையில் அந்த மக்களுக்கு சரியான மாற்றுத் தலைமைத்துவத்தை சரியான முறையில் வழிநடத்தினால் நிச்சயமாக மக்கள் அதற்கு ஆதரவு வழங்குவார்கள். அந்த வகையில் விக்கினேஸ்வரன் ஐயா ஒரு நேர்மையான அரசியல்வாதி. அவர் மீது தமிழ் மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post