அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட கைதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உபதலைவரும்இ வன்னி மாவட்ட வேட்பாளருமான சிவபாதம் கஜேந்திரகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று இரவு அனுப்பி வைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
நாட்டில் கொரனா தொற்று தொடர்பான அச்ச நிலை நீடித்துக் கொண்டு இருக்கும் நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கைதிகள் மத்தியிலும் இந் நோய் தொடர்பான அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
சிலர் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரனா தொற்று அச்சம் காரணமாக கைதிகள் தம்மை பாதுகாப்பதற்காக சிறைச்சாலையை உடைத்துக் கொண்டு வெளியில் வர முற்பட்டனர்.
இதன்போது சிறைக்காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட குழப்பம் களேபரமாக மாறி அங்கு கைதிகள் மீது துப்பாக்கி பிரயாகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கைதிகள் சிலர் காயமடைந்துள்ளனர்.
கொரனா அச்சம் நாட்டை பீடித்துள்ள நிலையில் கைதிகள் தம்மை பாதுகாப்பதற்காக எடுத்த முயற்சியை அரசாங்கம் மனிதாபிமானமாக பார்த்து அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
சிறைச்சாலைக்கு வெளியே உள்ள கைதிகளின் குடும்பங்களும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் சிறைச்சாலையில் உள்ள தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என தெரியாது கலங்கிப் போயுள்ளனர்.
ஆகவே தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களது குடும்பங்களுக்கும் அரசாங்கம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Post a Comment