தனியார் கல்வி நிலையங்களை தற்காலிகமாக தடைவிதிக்குமாறு ஆளுநரிடம் முதல்வர் கோரிக்கை - Yarl Voice தனியார் கல்வி நிலையங்களை தற்காலிகமாக தடைவிதிக்குமாறு ஆளுநரிடம் முதல்வர் கோரிக்கை - Yarl Voice

தனியார் கல்வி நிலையங்களை தற்காலிகமாக தடைவிதிக்குமாறு ஆளுநரிடம் முதல்வர் கோரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த முன்னெச்சரிக்கையாக தனியார் கல்வி நிலையங்களுக்கு தற்காலிகமாக தடைவிதிக்குமாறு யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ஸ் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்குறித்த விடயம் தொடர்பில் ஆளுநருக்கு இன்று 12.03.2020 அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே மேற்குறித்த விடயம் தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உலக அளவில் பாரிய சவாலாக மாறியுள்ள கொரோனா வைரஸினால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து முழு உலகமும் பேசிக்கொண்டிருக்கின்றது. குறித்த வைரஸ் தாக்கத்திலிருந்து தமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அந்த அந்த அரசுகள் பல்வேறு செயற்பாடுகளை முன்னெச்சரிக்கையாக மேற்கொண்டு வருகின்றமையை அறிவோம்.

அந்த வகையில் இலங்கையிலும் குறித்த வைரஸ் தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கையாக முன்னேற்பாடாக மாணவர்களை பாதுகாக்கும் வகையில் இலங்கை அரசு 13.03.2020 தொடக்கம் 20.04.2020 வரை அனைத்துப் பாடசாலைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக இன்று (12) அறிவித்துள்ளது.

இந் நிலையில் அரசின் குறித்த அறிவிப்பின் எதிர்பார்ப்பான மாணவர்களைப் பாதுகாக்கும் முன்னேற்பாடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாயின் தனியார் கல்வி நிலைய கற்றல் நடவடிக்கைகளையும் பாடசாலை மீள் ஆரம்பம் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதுதான் பொருத்தமாக அமையும் எனக் கருதுகின்றேன்.

எனவே எதிர்வரும் 13.03.2020 ஆம் திகதி தொடக்கம் 20.04.2020 ஆம் திகதி வரை தனியார் கல்வி நிலையங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி மாணவர்களுக்கான முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தங்களை தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post