அரசியல் தலையீடு தொடர்பில் பொதுச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு .- ஜோசப் ஸ்ராலின் - Yarl Voice அரசியல் தலையீடு தொடர்பில் பொதுச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு .- ஜோசப் ஸ்ராலின் - Yarl Voice

அரசியல் தலையீடு தொடர்பில் பொதுச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு .- ஜோசப் ஸ்ராலின்

278 தேசிய பாடசாலைகளுள் 153 தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது. பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதிமூலம் தகுதிவாய்ந்த அதிபர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆயினும் அதிகாரிகளினதும் அரசியல் வாதிகளினதும் பின்னணியில்  குறித்த அதிபர்கள் கடமையேற்க முடியாதவாறு நடைபெறும் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இத்தகைய முறைகேடுகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு  கல்வியமைச்சின் செயலாளருக்கும் பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவிக்கையில் -

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் அதிபர் பதவி வெற்றிடம் - கல்வி நிர்வாக சேவைக்குரியதாகும். இதற்கு வடமாகாண கல்வி திணைக்களத்தின் பிரதிகல்விப் பணிப்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையிலும் அவருக்கு இன்னும் நியமனம் வழங்கப்படவில்லை.

 வவுனியா மத்திய மகாவித்தியாலயத்துக்கு மடுகல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் - அவருக்கும் நியமனம் வழங்கப்படவில்லை.

இதேபோன்று – சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயம்இமாத்தறை கலிகம அக்ஷா தேசிய பாடசாலை பேருவளை அல் -உமைறா தேசிய பாடசாலை உட்பட சிலபாடசாலைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.
இது கல்வியமைச்சின் மிகப்பெரிய முறைகேடாகும்.

ஒரு சில பாடசாலைகளில் பதில் அதிபர்களாக செயற்பட்டவர்கள் அரசியல் வாதிகளின் தயவை நாடியிருப்பதே தகுதியானவர்களை நியமிக்க முடியாமைக்கான காரணமாகும். குறிப்பாக பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி விடயத்தில் இது முதன்மையானதாகக் காணப்படுகின்றது.

தேசிய பாடசாலைகளுக்கு பொருத்தமானவர்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையிலும் - அதற்கு பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட்ட நிலையிலும் கூட தமது குறுகிய அரசியலுக்காக அரசியல்வாதிகள் செயற்படுவதும் அவற்றுக்கு அதிகாரிகள் துணைபோவதுமே கல்வித்துறையைத் தொடர்ந்தும் பாதித்து வருகின்றது.

இந்த முறைகேடுகள் குறித்து  பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளோம். கல்வியமைச்சுக்கும் முறையான நியமனங்களை அமுல்படுத்துமாறு கூறியுள்ளோம்.

நியமனங்களில் அரசியல் தலையீடுகள் இருப்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. இவற்றுக்கெதிராக நடவடிக்கை எடுப்போம் என ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார். 


0/Post a Comment/Comments

Previous Post Next Post