மனித குலத்தை அழிக்கும் கொரோனாவிலிருந்து பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் - மாவை - Yarl Voice மனித குலத்தை அழிக்கும் கொரோனாவிலிருந்து பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் - மாவை - Yarl Voice

மனித குலத்தை அழிக்கும் கொரோனாவிலிருந்து பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் - மாவை

சீனாவில் கொரோனா வைரஸ் கிருமித் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கில் மரணமடைந்துள்ளனர். கடந்த இரு வாரங்களில் 185 நாடுகளில் இக்கொடியநோய் பரவிவருகின்றது எனவும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தும் பல ஆயிரம் மக்கள் பல நாடுகளில் மரணமடைந்துள்ளனர் என்ற செய்திகள் ஒவ்வொரு நிமிடமும் பரவி வருகின்றன.

இன்று வரை இலங்கையில் 70க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . வைரஸ் நோய் தீவிரமாக இலங்கையிலும் பரவி வருகிறது என்பது துயரமிக்க செய்தியாகும். தற்போது யாழ்ப்பாணத்தில் செம்மணி அரியாலைப் பகுதியில் இருவர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்பதும் தேவாலயங்களில் கூடிய மக்கள் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு தேடுதல் நடாத்தப்படுகிறதென்பதும் மக்களிடையே பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருவதாகவும் சீனாவின் பழமையான மருத்துவம் டிசிஎம் மருந்து பயன்பாடு உதவியதாக இருக்கிறதென்பதும் பெரும் ஆறுதலளிக்கிறது.

இக் கொரோனா வைரஸ் காற்றினூடாக பரவும் என்றும் மனிதர்கள் கூடும் இடங்களினாலும் தொடுகையிலும் இந்நோய் தொற்று ஏற்படுகிறது என்றும் அறியமுடிகிறது. சூரியவெப்பம் இவ் வைரஸ் கிருமியை கட்டுப்படுத்துகிறது எனும் தகவலுமுண்டு.

இந் நோய்க் கிருமிகள் ஏனைய உயிரினங்கள் கடல் வாழ்வன, மிருகங்கள், பறவைகள், பூச்சிகளிடம் தொற்றியிருப்பதாகக் காணவில்லை. உலகவியத்தகு அறிவியல் மருத்துவர்கள் புதிய வகை மருந்துகளைக் கண்டுபிடித்துவரும் செய்தி அமெரிக்கா, இஸ்ரேல், இந்திய நாடுகளிலிருந்து வருகின்றன. சீனாவில் தனித்துவமான உணவுப் பழக்க வழக்கங்களும், மருத்துவமும் பழமை வாய்ந்தன.

இப்பொழுது கொரோனா வைரசுக்கு சீனா டிசிஎம் மருந்து பயன்படுவது போல இலங்கையிலும் பழமை வாய்ந்த நாட்டுவைத்தியர்கள் ஆயள்வேத, சித்த மருத்துவர்கள் இந்நோயை அறிந்து மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு அரசுத் துறை ஊக்கமளிக்க வேண்டும்.

ஏனைய நாடுகளில் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த எடுக்கும் அனைத்து மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகளையையும் இலங்கை பின்பற்ற வேண்டும். உலக சுகாதார நிறுவனம், நாட்டு  அரசு சுகாதாரத் துறை, மாநில அரசு சுகாதாரத் துறையினரும், மருத்துவ மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோரின் அறிவித்தல்களைக் கண்டிப்பாக மக்கள் பின்பற்ற வேண்டும்.

அறிவிக்கப்படுகின்ற விதிகளை மீறாமல் இக்கொடிய நோயினால் தொற்றுக்குள்ளாவதைத் தடுக்க ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும். படிப்படியாக ஒவ்வொரு குடும்பத்திலும் குறிப்பாக முதியோர், சிறுகுழந்தைகள் ,நோயுற்றோர் அனைவரும் பரிசோதனைக்கும், நோய் தடுப்புக்கான மருத்துவத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றாமல் தடுப்பதற்கு அனைவருக்கும் தடுப்புமருந்துகள் கொடுக்கவேண்டும். ஆளணி பற்றாக்குறையில்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ ஆளணிகளை உருவாக்க வேண்டியதும் அவசியமாகும். இதற்காக மருத்துவத்திற்காக வல்லாண்மை நாடுகள் அமெரிக்கா, சீனா முதலான நாடுகள் உதவ அறிவித்துள்ளன பேருதவியாகும்.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களில் முப்பது ஆண்டுகளுக்கு மேலான போர் காரணமாகப் பெரிதும் பாதிப்புற்ற தேசமும் மக்களும் அதிகளவில் முதியோரையும், ஊட்டச் சத்து அற்ற குழந்தைகளையும் கர்ப்பிணித் தாய்மாரையும் கொண்டுள்ளது. இந் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தமிழ் மக்களிடையே இலகுவாக ஏற்பட்டுவிடும் எனும் ஆபத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். நோய் தொற்றையும் நோயையும் தடுத்துப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளும் அவசியமாகின்றது.

வரட்சி அதிகரிக்கிறது. குடிநீர்த் தட்டுப்பாடு, உணவுத் தட்டுப்பாடு போக்குவரத்துத் துறைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடப் போகின்றது. இலங்கை அரசானதும் கொரோனா வைரஸ் கிருமி பரவாமல் அனைவருக்கும் முதலுதவியாக தடுப்பு மருந்துகளையும் நோயாளிகளானால் உயர்தர மருத்துவத்தையும் வழங்க அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வற்புறுத்துகின்றோம். கொரோனா வைரசிலிருந்து எம்மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.







.

0/Post a Comment/Comments

Previous Post Next Post