ஆபத்தை புரிந்து கொண்டு எம்மை நாமே பாதுகாக்க பொறுப்போடு செயற்பட வேண்டும் - சிவஞானம் - Yarl Voice ஆபத்தை புரிந்து கொண்டு எம்மை நாமே பாதுகாக்க பொறுப்போடு செயற்பட வேண்டும் - சிவஞானம் - Yarl Voice

ஆபத்தை புரிந்து கொண்டு எம்மை நாமே பாதுகாக்க பொறுப்போடு செயற்பட வேண்டும் - சிவஞானம்

ஆபத்தை புரிந்து கொண்டு எம்மை நாமே பாதுகாக்க பொறுப்போடு செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தள்ளார்.

 இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

உயிர்க்கொல்லி நோயான கொவிட்-19 எனப்படும் கொரோனா தொற்றுநோய் இதுவரை உலகெங்கிலும் 15433 உயிர்களை காவு கொண்டுள்ளது. சுமார் 358804 பேர் இவ் நோய் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர். மேலும் 100645 பேர் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.

அமெரிக்கா பிரிட்டன் இந்தியா இத்தாலி பிரான்ஸ் உள்ளிட்ட உலகின் எல்லா நாடுகளும் இத் தொற்று நோய்தாக்கத்தை சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றன.

பல்லாயிரக்கணக்கானவர்களை இத் தொற்று நோய் காவு கொள்ளக்கூடும் என்ற எதிர்வு கூறல்கள் எல்லோரையும் அச்சமடைய செய்கின்றது.எமது நாட்டிலும் இதுவரை 90 க்கும் மேற்பட்டோர் இவ் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முறையான தடுப்பூசிகளோ மருந்துகளோ இன்றும் காணப்படாத நிலையில் நாம் ஒவ்வொருவரும் அரச நிர்வாகத்தினராலும் வைத்தியத் துறையினராலும் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை கடைப்பிடித்தல் கட்டாயமாகின்றது.

வடமாகாணத்தை பொறுத்தவரை இப்பொழுது ஒருவர் நோய்தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் பலர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.ஆனால் இங்கு தற்செயலாக இந்நோயின் தாக்கம் ஏற்பட்டால் அதனைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும் என்ற அரச மருத்துவ சங்கத்தினரின் எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

எனவே நாம் ஒவ்வொருவரும் நாமாகவே சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு அறிவுரைகளை முறைப்படி பின்பற்றுதல் கட்டாயமானது. ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பமும் அறிவுரையின்படி செயற்பட்டால் முழு நாடுமே இந்த ஆபத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளப்படும்.

வைத்திய நிபுணர்களும் அதிகாரிகளும் எவ்வளவுதான் அறிவுரைகளை வழங்கினாலும் அவற்றின் வெற்றி மக்கள் அவற்றை பின்பற்றுதலிலேயே தங்கியுள்ளது.

இன்றைய நிலையில் அலட்சியம் ஆபத்தானது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.போதுமான ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுவிட்டாயிற்று அவற்றைப் பின்பற்றுவது மக்களது பொறுப்பாகும்.பொறுப்போடு செயற்பட்டு எம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என எல்லோரையும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post