நாகரீகம் இருந்தால் விஷால் வர மாட்டார் - பாரதிராஜா - Yarl Voice நாகரீகம் இருந்தால் விஷால் வர மாட்டார் - பாரதிராஜா - Yarl Voice

நாகரீகம் இருந்தால் விஷால் வர மாட்டார் - பாரதிராஜா

நாகரிகம் தெரிந்தவராக இருந்தால் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று விஷால் வரமாட்டார் என்று பாரதிராஜா பேட்டியளித்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் விஷாலின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வந்தது.

சங்கத்துக்கு தேர்தல் நடத்த விருந்த நிலையில் அதில் முறை கேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தனி அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூன் 30ம் தேதிக்குள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் இன்றைய நிலை குறித்து சென்னையில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் கேயார் முரளிதரன் பாரதிராஜா உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது:

தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் என்பது தேவை இல்லை. ஒற்றுமை இல்லாமல் அனைவரும் பல அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். தலைவர் பதவிக்கு வருபவர்களுக்கு சேவை மனப்பான்மை இருக்க வேண்டும்.

ஆனால் பலதரப்பட்ட போட்டி வரும்போது சேவை மனப்பான்மை இருக்காது. ஆகவே தான் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களில் முக்கியமான சிலர் கூடிப் பேசி ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்யலாம் என நினைக்கிறோம்.

பதவிக்கு வரும் நபர்கள் தன்னுடைய அடையாளத்தை தொலைத்து விட்டு செயலாற்ற வேண்டும். தேர்தல் இல்லாமல் வயதில் மூத்த தயாரிப்பாளர்கள் சொல்வதை கேட்டு ஒத்துப் போகும் ஒருவர் தலைமை இடத்திற்கு வர வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். விஷால் மீது பல்வேறு ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளன.

எனவே நாகரிகம் தெரிந்தவராக இருந்தால் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று விஷால் வரமாட்டார். பொது வாழ்வில் குற்றம் இல்லாதவர் தான் தேர்தலில் நிற்க வேண்டும். இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post