யாழிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..
பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு இன்றைக்குப் பலரும் கைகொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். வடகிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் பல்வேறு சமூகநலன் விரும்பிகள் தொண்டர் நிறுவனங்கள் மக்கள் அமைப்புக்கள் இளைஞர் அமைப்புக்கள் என எல்லோருமே களத்தில் இறங்கி தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். அது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயம்.
ஆனால் அதே நேரத்தில் தேர்தலுக்காக நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிற நிலைமையிலே இன்னுமொரு விடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆனாலும் அவ்வாறு தேர்தல் குறித்து பேசுவதற்கான நேரம் இதுவல்ல. அவ்வாறு இல்லாவிட்டாலும் கூட பேச வேண்டியிருக்கிறது.
அதாவது தேர்தலிலே களமிறங்கியிருக்கின்ற சில வேட்பாளர்கள் மிக மலினமாக மலிவாக மக்களுடைய உணர்வுகளை எடைபோட்டு நிவாரணப் பணிகளிலே ஈடுபடுவதென்பது வெறுக்கத்தக்க செயல் என்பதை ஆகக் கூடிய வெறுப்புணர்வோடு நாங்கள் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.
அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. குறிப்பாக வடக்கைப் பொறுத்தமட்டிலே அதுவும் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்த வரையில் நேரடியான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. அவற்றை எல்லாம் நாங்கள் தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்ப முடியும். முறையீடு செய்ய முடியும். ஆனால் அவ்விதம் முறையீடு செய்வது ஒட்டுமொத்த சமூகத்தையும் நாங்கள் அவமானப்படுத்துகிற ஒரு விடயமாகத் தான் இருக்கும்.
ஆக உதவிகள் வரவேற்கப்பட வேண்டியது தான். உதவிகள் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. அதை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் தயவு செய்து அந்த உதவிகளை தேர்தலுக்கான சில்லறை இலஞ்சமாகப் பயன்படுத்த இனிமேலாவது எவரும் தொடரக் கூடாது. அவ்விதம் செயற்படக் கூடாது என்று நாங்கள் உரிமையோடு கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம்.
Post a Comment