எமது மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த இடர் காலப் பகுதியில் மலிவான கீழ்த்தரமான அரசியலை சிலர் செய்து வருவது கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் மககளுக்கான எங்கள் பணியை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துக் கொண்டே செல்வோம் என்றார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் விசேட கூட்டமொன்று கடந்த 28.3.2020 அன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதன் போது தற்போதைய இடர்காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்குவது தொடர்பில் பல்வேறு கட்சியின் உறுப்பினர்களும் இணைந்து கலந்துரையாடியிருந்தனர்.
இதன் போது தவிசாளர் உட்பட எவருமே ஒருகோடியோ அல்லது ஐம்பது இலட்சம் திட்டத்தையோ முன்வைக்கவில்லை. மாறாக சபையின் நிலையான வைப்பிலுள்ள நிதியினை செலவு செய்வதை மட்டுமே விவாதப் பொருளாக்கி அதில் உள்ள தடைகள் நடைமுறைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
ஆதனைத் தொடர்ந்து சபையின் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் தாய் சேய் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆறு இலட்சம் ருபாவை இந்த இடர்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அனைவரும் ஆதரவாக இருந்ததால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சம்பவங்கள் தான் அங்கு நடந்திருந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த இடர் காலப் பகுதியிலும் சிலர் கீழ்த்தரமான மலிவான அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறானவர்களினால் கடந்த சில நாட்களாக சில முகநூல்களிலும் இணையங்களிலும் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு தங்களைப் புனிதர்களாகக் காட்டிக் கொள்ள முற்படுபவர்கள் மற்றவர்கள் மீது திட்டமிட்ட வகையில் பழியை சுமத்த முற்படுகின்றனர். உண்மைக்கு மாறாக முன்னெடுக்கப்படுகின்ற இந்த பொய்ப் பிரச்சாரத்தை நாங்கள் கண்டிக்கிறோம்.
ஆகவே இந்த இடர்காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு உதவி செய்வதற்கு நாம் எப்போதும் ஆதரவாகவே இருக்கின்றோம். அதற்கமையவே சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கும் எமது முழுமையான ஆதரவைத் தெரிவித்திருந்தோம். அவ்வாறே எமது கட்சியினூடாக மக்களுக்கு உதவிகளை வழங்கியும் வருகின்றோம்.
மேலும் எந்த நிலையிலும் தமிழ் மக்களின் அபிவிருத்தி வாழ்வியல் முன்னேற்றப் பணிகளுக்கு எமது கட்சி உறுதுணையாக இருக்கும். மாறாக குறுக்காகவோ குந்தகமாகவோ இருக்காது என்பதையும் கூறி வைக்கின்றோம்.
ஆகவே மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த இடர் காலத்திலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருபவர்கள் அதனைத் தவிரத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

Post a Comment