கொரோனாவைக் காரணங்காட்டி மக்கள் முன்னணியினரைத் தனிமைப்படுத்தியதுபேரினவாத அரசியல் அராஜகம் - பொ.ஐங்கரநேசன் கண்டனம் - Yarl Voice கொரோனாவைக் காரணங்காட்டி மக்கள் முன்னணியினரைத் தனிமைப்படுத்தியதுபேரினவாத அரசியல் அராஜகம் - பொ.ஐங்கரநேசன் கண்டனம் - Yarl Voice

கொரோனாவைக் காரணங்காட்டி மக்கள் முன்னணியினரைத் தனிமைப்படுத்தியதுபேரினவாத அரசியல் அராஜகம் - பொ.ஐங்கரநேசன் கண்டனம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பொதுச்செயலாளர், தேசிய அமைப்பாளர் உட்பட பதினொரு பேரை, கொரோனா நோய்த் தொற்றைக் காரணங்காட்டி வீடுகளில் தனிமைப்படுத்தும் முயற்சியில் காவல்துறை வெற்றி கண்டுள்ளது.  இது சுகாதாரம் என்ற போர்வையில் காவல்துறை மேற்கொண்ட முற்றுமுழுதானபேரினவாத அரசியல் அராஜகம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
[ads id="ads1"]
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டுப் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி செலுத்திவந்த நிலையில் இருவார காலத்துக்குக் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு நேற்று (17.05.2020) முதல் உட்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில்,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல்நாளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சிலர் செம்மணியில் அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை, அங்கு பிரசன்னமான காவல்துறையினர் கொரோனாவைக் காரணங்காட்டி அவர்களைத் தனிமைப்படுத்தப் போவதாகச் சூளுரைத்துச் சென்றனர். கொரோனாப் பேரவலத்தின் மத்தியில் மக்கள் கூட்டமாகத் திரள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஆனால், அங்கு கூடியிருந்தவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய வெகுசிலரே. அத்தோடு அவர்கள் யாவரும் கொரோனாகால சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்துச்சமூக இடைவெளிகளைப் பேணி, முகக்கவசங்களை அணிந்தவாறே அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் பல நூற்றுக்கணக்கானவர்களைத் திரட்டியிருக்கமுடியும். ஆனால், செம்மணியில் மாத்திரம் அல்ல, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இலங்கைப் படைகளினால்படுகொலைகள் நிகழ்த்திய இடங்களாகப் பதிவாகியுள்ள பல இடங்களிலும் சமூகப் பொறுப்புணர்வுடன், சுகாதார நடைமுறைகளைப் பேணியவாறே அஞ்சலிகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையிலேயே, காவல்துறை அஞ்சலியின் முதல்நாளில் சூளுரைத்தவாறு அஞ்சலித்தவர்களைக் கட்டாயதனிமைப்படுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளைகளில் சுகாதார நடைமுறைகளைப் பேணாமல் மக்கள் பெருந்திரளாகப்பொது இடங்களில்; கூடுவதைக் கேள்விக்கு உட்படுத்தாத காவல்துறை, சுகாதார நடைமுறைகளைப் பேணியவாறு மிகமிகக் குறைந்த எண்ணிக்கையில் கூடி அஞ்சலித்தவர்களைக் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு ஆளாக்கியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாளினை மக்கள் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிப்பதைத் தடுப்பதும், மக்கள் மனங்களில் இருந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளின் பதிவுகளை அழிப்பதுமே ஆகும்.
[ads id="ads2"]
கொரோனாவைக் காரணங்காட்டி அஞ்சலித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டாலும், முள்ளிவாய்க்கால் அஞ்சலியில் கடந்த வருடங்களைப் போன்று பல்லாயிரக்கணக்கானோர் திரள்வது தடுக்கப்பட்டாலும் தமிழ் மக்கள் அனைவரும் கூட்டாகத் தங்கள் மனங்களில் அஞ்சலிப்பதைப் பேரினவாத அரசாலும், அதனைத் தூக்கி நிறுத்தி வைத்திருக்கும் அரச படைகளாலும் ஒருபோதும் தடுத்துவிடமுடியாது. முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து பதினொரு ஆண்டுகள் அல்ல, இன்னும் பலநூறு ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மனங்களில் முள்ளிவாய்க்காலில் மூண்ட தீ ஒரு சுடராகவேனும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post