கொவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது: பிலிப்பைன்ஸ் - Yarl Voice கொவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது: பிலிப்பைன்ஸ் - Yarl Voice

கொவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது: பிலிப்பைன்ஸ்

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே கடந்த மாதம், மாணவர்கள் பட்டம் பெற முடியாவிட்டாலும், நோய் பரவுவதை எதிர்த்துப் போராட பாடசாலையிலிருந்து வெளியேற வேண்டியது அவசியம் என்று கூறினார்.
இதனிடையே, ஒரு தடுப்பூசி கிடைக்கும் வரை நேருக்கு நேர் வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவுக்கு நாங்கள் இணங்குவோம் என கல்விச் செயலாளர் லியோனோர் பிரையன்ஸ் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஒகஸ்ட் மாத இறுதியில் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன. மேலும் ஆசிரியர்கள் இணையம் அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்பு வழியாக தொலைதூர கற்றல் முறைகளைப் பயன்படுத்துவார்கள் என பிரையன்ஸ் கூறினார்.
இதுகுறித்து கல்விச் செயலாளர் லியோனோர் பிரையன்ஸ் மேலும் கூறுகையில், ‘கொவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது. தனிமனித இடைவெளியுடன் குழந்தைகளைப் பாடசாலையில் உட்கார வைக்க உடன்பாடு இல்லை, குழந்தைகள் தங்கள் நண்பர்களை நெருங்கும் போது தொற்று நிச்சயம் பரவும்.
ஒகஸ்ட் இறுதி வாரம் முதல் இணையம் மற்றும் தொலைக்காட்சி மூலமாக கற்பித்தல் வகுப்புகள் தொடங்கும். எனினும் வறுமையான மற்றும் இணைய இணைப்பு இல்லாத தொலைதூர சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி குறித்துக் கவலை எழுகிறது. இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து யோசித்து வருகிறோம்’ என கூறினார்.
மில்லியன் கணக்கான மாணவர்கள் பிலிப்பைன்ஸில் ஆழ்ந்த வறுமையில் வாழ்கின்றனர். மேலும் வீட்டில் கணினிகள் கிடைப்பதில்லை, இது இணைய வழியான வகுப்புகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, அரசாங்கத்தின் இந்த அறிவிப்பால், 10 மில்லியன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கொவிட் -19 இற்க்கான தடுப்பூசியை உருவாக்க குறைந்தபட்சம் ஒரு வருடம் அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகும் என கூறுகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post