ஜோகோவிச்சின் பயிற்சியாளர் கோரன் இவானிசெவிச்சுக்கும் கொவிட்-19 தொற்று! - Yarl Voice ஜோகோவிச்சின் பயிற்சியாளர் கோரன் இவானிசெவிச்சுக்கும் கொவிட்-19 தொற்று! - Yarl Voice

ஜோகோவிச்சின் பயிற்சியாளர் கோரன் இவானிசெவிச்சுக்கும் கொவிட்-19 தொற்று!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள, டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச்சின் பயிற்சியாளர், கோரன் இவானிசெவிச்சுக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சர்வதேச டென்னிஸ் தொடர்கள் இரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தொண்டு நிறுவனத்திற்கு நிதி சேர்க்கும் வகையில் அட்ரியா டூவர் தொடரை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த தொடரின் போது, முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த குரேஷியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான போர்னா கோரிக் மற்றும் பல்கேரியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் நட்சத்திரமான கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோருடன் ஜோகோவிச், விளையாடியிருந்தார்.

இந்த பின்னணியிலேயே நோவக் ஜோகோவிச்சுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது 48 வயதான குரேஷியாவின் கோரன் இவானிசெவிச்சும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இவானிசெவிச் இன்ஸ்டாகிராம் பதிவில், ‘கடந்த 10 நாட்களில் எனக்கு நடத்தப்பட்ட 2 மருத்துவ பரிசோதனைகளில் எதிர்மறை என்று முடிவு வந்த நிலையில், தற்போது நடத்தப்பட்ட சோதனையில் எதிர்பாராதவிதமாக நேர்மறை என்று தெரியவந்துள்ளது. எனக்கு நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை. எனது உடல்நிலை நன்றாகவே இருக்கிறது.

என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும், அவர்களை சார்ந்தவர்களும் கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் தொடர்ந்து சுய தனிமைப்படுத்துதலை கடைப்பிடிப்பேன். கொரோனா தொற்றுக்கு ஆளான அனைவரும் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வர வாழ்த்துகிறேன்’ என்று கூறினார்.
முன்னாள் வீரரான கோரன் இவானிசெவிச், 2001ஆம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post