வலி. மேற்கு பிரதேச சபையில் அமரர் ரங்கராஜாவுக்கு அஞ்சலி -அவரது சேவைக்கு சபை மதிப்பளித்தது- - Yarl Voice வலி. மேற்கு பிரதேச சபையில் அமரர் ரங்கராஜாவுக்கு அஞ்சலி -அவரது சேவைக்கு சபை மதிப்பளித்தது- - Yarl Voice

வலி. மேற்கு பிரதேச சபையில் அமரர் ரங்கராஜாவுக்கு அஞ்சலி -அவரது சேவைக்கு சபை மதிப்பளித்தது-

வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளர் அமரர் சிவகுருநாதன் ரங்கராஜாவுக்கு வலி.மேற்கு பிரதேச சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைக்கு பிரதேச சபை மதிப்பளித்துள்ளது.

வலி.மேற்கு பிரதேச சபையின் 28 ஆவது அமர்வு இன்று (25) வியாழக்கிழமை சபையின் மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் என்.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா, அமரர் ரங்கராஜாவுக்கு சபையில் அஞ்சலி செலுத்த வேண்டும் என தனிநபர் வாய்மூல பிரேரணை ஒன்றை கொண்டுவந்தார்.

வாய்மூல பிரேரணை கொண்டுவந்த பொன்ராசா, தமிழர்களின் சிறந்த நிர்வாக அதிகாரியாகவும் ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராகவும் இருந்த அமரர்  ரங்கராஜா எமது பொன்னாலை வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்டவர். இவர் தமிழர்களுக்கு கிடைத்த சொத்து.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு – கிழக்கு மாகாணம் எங்கும் பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு காத்திரமான பங்காற்றியவர். அவர் என்றும் மறக்கப்பட முடியாதவர். அவருக்கு இந்த உயரிய சபையில் அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும். – என கேட்டுக்கொண்டார்.

இதை சபை ஏற்றுக்கொண்டது. சபையின் தவிசாளர், செயலாளர், சபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அமரர் ரங்கராஜாவுக்கு இரு நிமிடம் அகவணக்கம் செலுத்தினர்.

தவிசாளர் என்.நடனேந்திரன் அகவணக்கம் செலுத்தி அஞ்சலி உரை ஆற்றும்போது, ரங்கராஜா ஆளுமைமிக்க சிறந்த நிர்வாக அதிகாரி. பொன்னாலை கிராமத்தில் பிறந்து வடக்கு – கிழக்கு மாகாணம் எங்கும் பணியாற்றியவர். பொன்னாலை வரதராஜப் பெருமாளில் பற்றுக்கொண்டவர். நிறைவான அதிகாரி.

தமிழர்களின் விடுதலைப் போராட்ட காலத்தில் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்புகளை பேணியதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையாற்றியவர். உள்ளுராட்சியின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பாக, முன்மாதிரியான செயற்பாடுகளை மேற்கொண்டவர்.

எமது பிரதேசத்தில், திருவடிநிலையில் ஒரு சுற்றுலா மையத்தை உருவாக்கி அதை பிரதேச சபையிடம் கையளிக்கவேண்டும் என எண்ணம் கொண்டிருந்தவர். தாம் நினைத்ததை சிறப்பாக செய்துமுடிக்கக்கூடிய ஒருவர்.

யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் சிறந்த ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்கியவர். வடக்கு மாகாணத்தில் உள்ள மூத்த அதிகாரிகளோடு நெருங்கி பழகியவர். பொன்னாலை மண்ணுக்கும் வலி.மேற்கிற்கும் பெருமை சேர்த்த அவரை என்றும் நாம் நினைவில் வைத்திருக்கவேண்டும். – என்றார்.

இங்கு செயலாளர் கி.விஜயேஸ்வரன் உரையாற்றுகையில், 1993 ஆம் ஆண்டு முதல் நியமனம் திருகோணமலையில் எனக்கு கிடைத்தபோது நான் அவரது அலுவலகத்தில் கடமையைப்பொறுப்பேற்றேன். அவர் அகில இலங்கை திட்டமிடல் சேவையை சேர்ந்த ஒருவர். அவருக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அவருக்கு முதல் நியமனம் கிடைத்தது.

சிறந்த ஆளுமைமிக்கவர். இவரது காலத்திலேயே வடக்கு - கிழக்கு மாகா சபை கணினித்துறையில் முன்னேற்றம் அடைந்தது. இவரது சிறந்த ஆளுமை காரணமாக வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டார்.

வடக்கு – கிழக்கு மாகாணம் யுத்தத்தில் மூழ்கியிருந்த காலமாகிய அப்போது, நிக்கொட், நியாப், நீர்ப், நெக்டெப் போன்ற பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு அவர்களின் உதவியுடன் வடக்கு – கிழக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டவர்.

2007 இல் வடக்கு - கிழக்கு மாகாணம் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டபோது வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராகவும் அதன் பின்னர் வடக்கு ஆளுநரின் செயலாளராகவும் பதவி வகித்தவர். நாட்டுக்கு அவர் உழைத்த உழைப்பை எப்போதும் நாம் மறக்கக்கூடாது. – என்றார்.

இங்கு உறுப்பினர் ச.ஜெயந்தன் உரையாற்றுகையில், அமரர் ரங்கராஜா சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் பழைய மாணவர். பழைய மாணவர் சங்கத்திற்கும் பாடசாலையின் அபிவிருத்திக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியவர்.

எளிமையான அவர் ஒரு நிர்வாக அதிகாரி மட்டுமன்றி சிறந்த அனுபவசாலி. தமிழ் அதிகாரிகள் மட்டுமன்றி தென்பகுதி அதிகாரிகளுக்கும் வழிகாட்டியாக இருந்தவர். அவரை மறக்கமுடியாது. அவரது இழப்பு ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. - என்றார். உறுப்பினர் பரமசிவம்பிள்ளையும் இங்கு அஞ்சலி உரையாற்றினார்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post