தமிழ்த் தேசிய நீக்க அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரம் - மாம்பழம் ஐங்கரநேசன் குற்றச்சாட்டு - Yarl Voice தமிழ்த் தேசிய நீக்க அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரம் - மாம்பழம் ஐங்கரநேசன் குற்றச்சாட்டு - Yarl Voice

தமிழ்த் தேசிய நீக்க அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரம் - மாம்பழம் ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

தமிழ்த் தேசிய விடுதலைப் போரட்டத்தை ஜனநாயக ரீதியாக முன்னெடுப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று அதற்கு எதிரான பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. 

தன்னுள் இருந்த புலி ஆதரவுத் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டாளர்களை முதலில் வெளியேற்றிய கூட்டமைப்பு இன்று தமிழ்மக்களின் நெஞ்சங்களில் எரிந்து கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசிய உணர்வை அணைத்து நீக்குகின்ற அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான பொ.ஐங்கரநேசன் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுகின்றது. வேட்பாளர்களை பசுமை இயக்க உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் கிளிநொச்சி கூட்டுறவுக் கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

தேசிய இனங்கள் எல்லாம் தங்களைத் தேசங்களாகச் சொந்தம் கொண்டாட முடியாது. இலங்கைத் தீவில் தமிழர்களும் சிங்களவர்களும் மாத்திரமே தேசம் என்று தங்களைக் கொண்டாடுவதற்கு உரித்துடையவர்கள். ஒரு தேசிய இனம் தேசமாகக் கருதப்படுவதற்கு அந்தத் தேசிய இனத்திற்கு ஆட்சிக்குட்பட்ட ஒரு நிலப்பரப்பு இருத்தல் வேண்டும். 

தமிழ்மக்களுக்கு மன்னராட்சிக் காலத்திலும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது காலத்திலும் அவ்வாறானதொரு நிலை இருந்தது. முள்ளிவாய்க்காலோடு எங்களிடம்; இருந்து ஆட்சி பறிக்கப்பட்டுவிட்டது. 

ஒரு தேசிய இனம் தேசமாகக் கருதப்படுவதற்கு குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பு இருத்தல் வேண்டும். எங்களுக்கு வடக்கு கிழக்கு அவ்வாறானதொரு பாரம்பரியத் தாயகம்தான். ஆனால், பேரினவாதம் முதலில் இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு மாறாக நிர்வாக ரீதியாக வடக்குக் கிழக்கைத் துண்டாடியது. 

இப்போது வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்ற திணைக்களங்களினால் நிலங்களை அபகரித்து எமக்குரிய தாயகத்தின் நிலப்பரப்பைச் சுருக்கிவருகிறது. 

ஒரு தேசிய இனம் ஒரு தேசமாகக் கருதப்படுவதற்கு அந்த இனமக்கள் தாங்கள் ஒரு தேசம் என்ற உணர்வு நிலையைக் கொண்டிருத்தல் முக்கியமானது. மிகமுக்கிய பண்பாக விளங்கும் இந்த உணர்வு நிலையைப் பேரினவாதிகளோடு சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இல்லாமற் செய்துவருகின்றனர். 

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதவடிவத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தவரை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் ஒப்பிடுகிறார்கள். அமைச்சர்களாகுவதற்குத் தங்களுக்கு ஆணை தாருங்கள் என்று கேட்டு நிற்கிறார்கள். 

தமிழ்மக்களின் மனங்களில் எஞ்சியுள்ள தேசம் என்கின்ற உணர்வு நிலையையும் இல்லாமல் செய்து இலங்கை ஒரு தேசம் இலங்கை ஒரு நாடு என்ற பேரினவாதக் கோசத்திற்கு வலுச்சேர்த்து வருகின்றார்கள். சிங்களத் தேசத்துக்குள் தமிழ்த் தேசத்தைக் கரைக்கின்ற கைங்கரியத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். 

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முற்றாக நிராகரிப்பதன் மூலம் தமிழ்மக்கள் தனியான ஒரு தேசிய இனம் மாத்திரமல்ல் தனியான ஒரு தேசம் என்பதையும் பேரினவாதிகளுக்கும் உலகத்துக்கும் உரத்துச் சொல்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.  

0/Post a Comment/Comments

Previous Post Next Post