குருபரனின் பதவி விலகல் கல்வி சமுகத்திற்குப் பேரிழப்பாகும், பல்கலைக்கழக சமுகம், உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் - தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை - Yarl Voice குருபரனின் பதவி விலகல் கல்வி சமுகத்திற்குப் பேரிழப்பாகும், பல்கலைக்கழக சமுகம், உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் - தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை - Yarl Voice

குருபரனின் பதவி விலகல் கல்வி சமுகத்திற்குப் பேரிழப்பாகும், பல்கலைக்கழக சமுகம், உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் - தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை



யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டதுறை முதுநிலை விரிவுரையாளரான கலாநிதி குமாரவடிவேல் குருபரன் யாழ்ப்பாண சட்டத்துறை மாணவர்களிற்கு சிறந்த ஆசானாக கல்வி போதித்துக் கொண்டிருப்பது சகலரும் அறிந்ததே. அதே வேளையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக நீதி வேண்டி குரல் கொடுத்து தனது துறைசார்ந்தும் அதற்கு அப்பாலும் முழுப் பங்களிப்பினையும் வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு சமுக செயற்பாட்டாளராக அவரை தமிழ் சமுகம் நன்கு அறிந்திருக்கின்றது.

கலாநிதி குருபரன் அவர்கள் தனது விரிவுரைப் பணிகளுக்கு அப்பால் மாணவர்கள் சிறந்த ஆளுமையுள்ளவர்களாகவும் சிறந்த மனிதர்களாகவும் நீதியை நிலைநாட்டும் சட்டவாளர்களாகவும் உருவாக வேண்டும் என்று பல செயற்பாடுகளை பல்கலைக்கழகம் சார்ந்தும் அதற்கு அப்பாலும் முன்னெடுத்திருந்தார்.

இதற்காக கலாநிதி குருபரன் அவர்கள் ”அடையாளம்” என்னும் பெயரில் கொள்கை ஆராய்ச்சி மையம் ஒன்றினை உருவாக்கி அதன் நிர்வாக இயக்குநராகவும் இருந்துகொண்டு நீதி வேண்டிப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்காக சட்டத்துறை சார்ந்து அவர்களுக்குப் பக்கபலமாக நின்றுகொண்டிருக்கின்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சார்ந்த வழக்குகளிலும் சட்ட செயற்பாடுகளிலும் பல்கலைக்கழகத்தினதும் பல்கலைக்கழக சமுகம் சார் செயற்பாடுகளின் சட்டம் சார்ந்த செயற்பாடுகளிலும் நீதியை நிலைநாட்டும் முகமாக தனது பங்களிப்பினை கலாநிதி குருபரன் வழங்கியுள்ளார், பல்கலைக்கழகமும் பெற்றுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தமிழ் மக்கள் பேரவை தயாரித்து வெளியிட்ட தீர்வுத்திட்ட வரைபின்  உருவாக்கத்தில் ஒரு சட்டத்துறை நிபுணராக தன் துறை சார்ந்து கலாநிதி குருபரன் அவர்கள் பெரும்பங்காற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளராக பணிபுரியும் சட்டத்துறையினர் விரிவுரைகளைப் பாதிக்காதவாறு நீதிமன்றங்களில் வழக்குகளை முன்னெடுத்து வந்துள்ளார்கள். இலங்கையில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியிலும் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர்கள் பலர் முக்கிய வழக்குகளில் நீதிமன்றங்களில் வழக்குகளில் முன்னிலையாகி தமது வாதங்களின் மூலம் நீதிக்காகப் போராடுகின்றார்கள்.

அந்தவகையில் நாவற்குழியில் நடைபெற்ற ஒரு சுற்றிவளைப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் தொடர்பாக நீதி வேண்டி அந்த வழக்கில் கலாநிதி குருபரன் அவர்கள் முன்னிலையாகி வாதாடிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த வழக்கு முக்கிய கட்டத்தினை அடையும் இத்தருணத்தில் நீதியின் முன்னேற்றத்தால் பாதிப்படையக்கூடிய தரப்பினரால் வழங்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களாக இருக்கும் சட்டத்துறையினர் நீதிமன்றங்களில் வழக்குகளை முன்னெடுக்கமுடியாது என்று முடிவெடுத்துள்ளது.

இம்முடிவினை கேள்விக்குட்படுத்தும் தகமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக்கு இருந்தும் கூட எவ்வித பரிசீலனையும் செய்யாது பக்கச்சார்பாக பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவினை  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது. தமக்குள்ள தகமையைப் பயன்படுத்த முடியாத கையறுநிலையில் தற்துணிவற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை இருந்ததையிட்டு ஒட்டுமொத்த தமிழ் சமுகமும் மனவேதனை அடைந்துள்ளது.

இந்தநிலையில் கலாநிதி குருபரன் அவர்கள் தனது பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியிலிருந்து விலகுவதாக முடிவெடுத்து அறிவித்துள்ளார். இது பார்க்கும்போது அவர் தாமாக எடுத்த முடிவு போலிருந்தாலும், உண்மையில் அவர்மீது வழங்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவும் , நீதியற்ற, அறமற்ற செயற்பாடுகள் காரணமாகவும் வலிந்து எடுக்கப்பட்ட ஒரு முடிவேயாகும். சட்டத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற ஒரு விரிவுரையாளரை யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள் இழந்திருக்கின்றார்கள் என்பது வேதனைக்குரிய ஒரு விடயமாகும்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக நீதிவேண்டி போராடிக்கொண்டிருந்த ஒரு சட்டவாளருக்கு ஏற்பட்ட இந்த நிலை தனியே அவருக்கானது இல்லை. மாறாக நீதிக்காக குரல் கொடுக்கும், போராடும் சகலருக்கும் அவர்களை முடக்குவதற்கும் அவர்களின் நீதிக்கான குரல்களை நசுக்குவதற்கும் இலங்கை அரசினாலும் அரச இயந்திரங்களாலும் விடுக்கப்பட்ட ஒரு அச்சுறுத்தலாகவும், நீதிக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாகவும் அமைவதோடு இலங்கையின் சட்ட எல்லைகளுக்குள்ளே  தமிழருக்கு நியாயம், தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கைகளை தகர்த்துவிடும்.

எனவே கலாநிதி குருபரன் மீதான இந்த முட்டுக்கட்டையை விலக்குமுகமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவினை பல்கலைக்கழகப் பேரவை மீள்பரிசீலிக்க வேண்டும். அதனை மானியங்கள் ஆணைக்குழுவும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ் சமுகமும் எதிர்பார்க்கின்றது.
இதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுகமும், ஒட்டுமொத்த தமிழ் சமுகமும் முற்போக்கு சிங்கள சக்திகளும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பில் தமிழ் மக்கள் பேரவை வேண்டிநிற்கின்றது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post