மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அதிகாரத்தில் வீணற்ற குழப்பம் - தவராசா சுட்டிக்காட்டு - Yarl Voice மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அதிகாரத்தில் வீணற்ற குழப்பம் - தவராசா சுட்டிக்காட்டு - Yarl Voice

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அதிகாரத்தில் வீணற்ற குழப்பம் - தவராசா சுட்டிக்காட்டு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அதிகாரத்தில் வீணற்ற குழப்பம் என வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா தெரிவித்துள்ளார்.

இவ்விடயங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாடுகள் வரையறைகள், அதிகார எல்லைகள் தொடர்பாக இன்று பல குழப்பமான கருத்துக்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.  குறிப்பாக, அரச அதிகாரிகள் மட்டத்தில் கூட இது தொடர்பாக சில தெளிவற்ற கருத்துக்கள் நிலவுவதாக அறியக் கிடைக்கின்றது. 

மாவட்;ட ஒருங்கிணைப்புக்குழு என்பது ஓரு மாவட்டத்தின் நிறைவேற்று செயற்பாடுகளை, குறிப்பாக அபிவிருத்தி திட்டங்களை, ஒன்றிணைப்பதற்கும், மேற்பார்வை செய்வதற்குமான ஒரு நிர்வாக ரீதியான ஏற்பாடாகும். இக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக பொதுநிர்வாக, ஜனாதிபதி செயலகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சு போன்றவற்றின் சுற்றிக்கைகளே வழிகாட்டியாக அமைகின்றது.

அத்துடன் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு பொது இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்க வேண்டுமென வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றனவே தவிர இணைத்தலைரோ, அல்லது மாவட்ட செயலாளரோ தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதற்கோ, மேற்பார்வை செய்வதற்கோ அதிகாரமளிக்கப்பட்டவர்களாக அச் சுற்றிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை.

மேலும் ஓர் அமைச்சர் ஃ அமைச்சுக்கு அரசியல் அமைப்பு ரீதியாகவும் சட்ட ஏற்பாடுகளினூடாகவும் வழங்கப்பட்டுள்ள அதிகார எல்லையை மீறியும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவுகளை எடுக்க முடியாது. 

ஒர் அமைச்சரின் தத்துவங்கள் அரசியல் அமைப்பின் பிரிவு 42, 43 இல் விதந்துரைக்கப்பட்டவைக்கு அமைவாக அமைகின்றது.

ஒர் அமைச்சரின் பணிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் அமைய தனது பொறுப்பிலுள்ள அரசாங்க திணைக்களங்கள் அல்லது வேறு நிறுவனங்கள் செயற்பட வேண்டுமென்பது அரசியல் அமைப்பின் பிரிவு 52(2) இல் அமைச்சருக்கு வழங்கியுள்ள தத்துவம். அதேபோல், ஒர் அமைச்சிற்கு உரிய விடயப்பரப்புகள் அந்தந்த அமைச்சுக்குரிய சட்;ட ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அத்துடன் ஜனாதிபதியின் செயலாளரினால் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்ட 19.08.2020 திகதிய மாவட்ட செயலாளர்களுக்கான கடிதத்தில் மாண்புமிகு ஜனாதிபதி ஒவ்வொரு மாவட்டத்தினதும் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு அம் மாகாணத்தின் ஆளுநரையும், ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் இணைத்தலைவர்களாக நியமித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதிலிருந்து மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக எவரும் நியமிக்கப்படவில்லை என்பதும் தெளிவாகின்றது. மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தொடர்பாக சுற்றறிக்கைகள் காலத்துக்கு காலம் சில சில மாற்றங்களுடன் வெளிவந்துள்ளன. 

இவற்றில், விடயங்களை தெளிவுபடுத்தும் முக்கியத்துவம் கொண்டவையாக  24.10.1996 ஆம் திகதிய பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கை, 23.03.2016 ஆம் திகதிய ஜனாதிபதி அலுவலகச் சுற்றிக்கை, 22.05.2017 திகதிய உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கை, 13.02.2019 மற்றும் 27.06.2019 ஆம் திகதிய  உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண அமைச்சு ஆகியவற்றின் சுற்றிக்கைகள் குறிப்பிடத்தக்கவை.

இச்சுற்றிக்கைகளில் இருந்து மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பாக பின்வருவன காணக்கூடியதாக இருக்கின்றது. 

1. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட மட்டத்தில் காணப்படும் அனைத்து அபிவிருத்தி கருத்திட்டங்களையும் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை செய்யும் பிரதான குழுவாகும். 

2. மாவட்ட செயலாளர் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மாவட்ட இணைப்புக்குழுக்களில்; கலந்துரையாடி பொது இணக்கப்பாட்டின் படி செயற்படுத்தப்பட வேண்டும்

3. மேற்குறித்த நோக்கத்தை அடைவதற்காக செற்படும் போது அரச சுற்றறிக்கைகள் போன்றவற்றிலுள்ள சட்டபூர்வ ஏற்பாடுகள் காரணமாக ஏதாவது தடையோ, சிக்கல் நிலையோ ஏற்படுமானால் பொருத்தமான திருத்தங்களை மேற்கொள்ளுதல் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக புதிய முன்மொழிவுகளை முறைப்படி உரிய அலுவலர்களுக்கு (நிரல் அமைச்சுக்கள்ஃ திணைக்களங்கள்ஃ அரச திணைக்களங்கள்ஃ அரச நிறுவனங்கள்) அனுப்ப வேண்டியது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாகும்.

4. மாவட்ட இணைப்புக்குழுவால் எடுக்கப்பட்ட சில முடிவுகள் விடயம் சார்ந்த அமைச்சின் நடவடிக்கைகளை பாதிக்கும் சந்தர்ப்பம் ஒன்றில் அக்குழு முடிவை செயற்படுத்துவதற்கு முன் சம்பந்தப்பட்ட விடயம் சார்ந்த அமைச்சினதும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினதும், உள்நாட்டலுவல்கள் அமைச்சினதும் இணக்கத்தைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

அந்தவகையில் தற்போது ஒருங்கிணைப்பு குழு தலைமை தொடர்பில் அதிகாரிகளுக்கு, குறிப்பாக உயர் அதிகாரிகளுக்கு, ஏற்பட்டுள்ள குழப்பநிலையை அதற்கென வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை சரிவர புரிந்துகொண்டு மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்ள வேண்டும் என்பதே இத்தெளிவுபடுத்தலின் நோக்கமாகும்.
 


0/Post a Comment/Comments

Previous Post Next Post