வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நாளை 108 பானைகளில் பொங்கல் - தமிழரின் அடையாளத்தை பாதுகாக்க அணி திரளுமாறு யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை - Yarl Voice வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நாளை 108 பானைகளில் பொங்கல் - தமிழரின் அடையாளத்தை பாதுகாக்க அணி திரளுமாறு யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை - Yarl Voice

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நாளை 108 பானைகளில் பொங்கல் - தமிழரின் அடையாளத்தை பாதுகாக்க அணி திரளுமாறு யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை



வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவான நெடுங்கேணி, ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3கி.மீ தொலைவில் வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது. சுமார் 3000ம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலையானது பல வரலாற்றுச் சிறப்புக்களைக் கொண்டு காணப்படுகின்றது.

 300 மீற்றர் உயரமான வெடுக்குநாறி மலை அடிவாரத்தின் கீழ் தமிழ்ப்பிராமிய கல்வெட்டுக்கள் மற்றும் வட்டெழுத்துக்கள் போன்றவற்றைக் காணமுடியும். மலையின் உச்சியில் ஆதி லிங்கேஸ்வரர் எனும் சிவனுடைய லிங்கம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையினருக்கு மேலாக இப் பிரதேச மக்கள் இந்த ஆலயத்தை வழிபட்டு வருகின்றனர். இலங்கைத் தொல்லியல் திணைக்களம் அதனைத் தமது பிரதேசமாக கைக்கொள்ளும் வகையில் இவ்வாலயத்தில் பூஜை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடையாக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

தற்போது நீதி மன்றத்தினால் வழக்கு தாக்கல் நிராகரிக்கப்பட்டு ஆலய உற்சவத்தை வழமை போன்று நடாத்த அனுமதி வழங்கிய நிலையில் தமிழரின் அடையாளமும் பண்பாட்டு அம்சமும் மிக்க இவ்வாலயத்தை பாதுகாக்க வேண்டிய கடமை தமிழர்களாகிய எமக்கு உண்டு. 

அந்தவகையில் வெடுக்குநாறிமலை ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் 17.09.2020 அன்று ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 26.09.2020 சனிக்கிழமை அன்று 108 பானைகளில் பொங்கலுடனான இறுதி உற்சவம் நடைபெறவுள்ளது. எனவே எவ்வித மதவேறுபாடுகளுமின்றி தமிழரின் பாரம்பரியத்தை காப்பதற்கு தமிழ் மக்களின்  பூரண ஒத்துழைப்பு என்பது அவசியமாகின்றது. 

இன்று தமிழரின் அடையாளங்கள் பல அழிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை பாதுகாக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும். அவற்றை பாதுகாப்பதன் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு தமிழரின் பாரம்பரியங்கள், அடையாளங்களை தெரியப்படுத்துகின்ற தேவை எமக்கு உண்டு.

 இன்று பலராலும் பேசப்படும் ஒரு விடயமாக வெடுக்குநாறிமலை ஆலயம் காணப்படுகின்றது. தமிழர்களின் வட, கிழக்கு எல்லையோர கிராமங்கள் திட்டமிட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதேபோன்று இவ்வாலயமும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுவிடும் என்ற பயம் எம்மவர் மத்தியில் காணப்படுகின்றது. 

இந் நிலையில் இவ்வாலயத்திற்கு மக்கள் சென்று வரும் பட்சத்தில் இவ்வாலயம் தொடர்பாக மேலதிக விழிப்புணர்வு தமிழ் மக்கள் மத்தியில் கிடைக்கப்பெறும். எனவே தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக எமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை தினமும் சென்று வழிபடுவதன் மூலம் தமிழரின் பாரம்பரியங்களும், அடையாளங்களும் காக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

எனவே யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமும் இவ்வாலய பொங்கல் நிகழ்விற்கு பூரண ஆதரவை வழங்குவதோடு அன்பான தமிழ் பேசும் உறவுகள் அனைவரையும் எமது கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் இப் பொங்கல் நிகழ்விலே கலந்துகொள்ளமாறும் கேட்டுக் கொள்கின்றோம்

0/Post a Comment/Comments

Previous Post Next Post