வடக்கிற்கு அனுப்பிய நிதி எவ்வகையிலும் திருப்பி அனுப்பவில்லை - முன்னாள் அமைச்சர் சர்வேஸ்வரன் ஆதாரத்துடன் விளக்கம் - Yarl Voice வடக்கிற்கு அனுப்பிய நிதி எவ்வகையிலும் திருப்பி அனுப்பவில்லை - முன்னாள் அமைச்சர் சர்வேஸ்வரன் ஆதாரத்துடன் விளக்கம் - Yarl Voice

வடக்கிற்கு அனுப்பிய நிதி எவ்வகையிலும் திருப்பி அனுப்பவில்லை - முன்னாள் அமைச்சர் சர்வேஸ்வரன் ஆதாரத்துடன் விளக்கம்
2018 ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபையின் 32 நிறுவனங்களில் 31 நிறுவனங்கள் விருதுகளைப் (பதக்கங்கள்) பெற்றுக் கொண்டது. ஏனைய மத்திய மாகாண அமைச்சுக்கள் திணைக்களங்களை ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சபையின் நிதி முகாமைத்துவம் சிறப்பாக நடைபெற்றது என முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன் ஊடகங்களுக்கு இன்று தெரிவித்திருக்கின்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய ஆட்சி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆம் திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறையே இல்லாதொழிக்க வேண்டுமென அரசின் பல்வேறு அமைச்சர்களும் பேசிவருகின்றனர்.

 இவ்வாறு இல்லாது ஒழிப்பதற்காக அவர்கள் கூறும் காரணங்களில் ஒன்று மாகாணசபை வினைத்திறனாக செயற்படவில்லை என்பதாகும். இதற்கு உதாரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னால் பிராந்திய விடயங்கள் மற்றும் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய அவர்கள் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு அனுப்பப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் திரும்பி வந்ததாக ஓர் முழுமையான பொய்யான காரணத்தை ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றார். 

2013 புரட்டாதி மாதம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை 2018 புரட்டாதி வரை செயற்பட்ட காலத்தில் வடக்கு மாகாண சபைக்கென மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக தொடர்ச்சியாக பொய்யான பிரசாரம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில அமைச்சர்கள் மற்றும் இன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட கடந்த வாரம் பிராந்திய விவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வரை ஊடகங்களுக்கு தெரிவித்து வருகின்றனர். 

இப்பிரசாரம் முழுக்க முழுக்க பொய்யானது என்றும் உள்நோக்கம் கொண்டது என்றும் அதனை நிரூபிக்குமாறு நாம் தொடர்ச்சியாக உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்து வருகின்ற பொழுதும் அதனை நிரூபிப்பதை விட்டுவிட்டு ஓர் பொய்யை தொடர்ந்து சொன்னால் அது உண்மை போன்று நிலை நிறுத்தப்பட்டுவிடும் என்ற கொயபல்ஸ்  கோட்பாட்டையொற்றி இப்பிரசாரம் தொடர்கிறது. உண்மையான தகவல்களையும் தரவுகளையும் இவ்வறிக்கையூடாக முன்வைப்பதன் மூலம் இப்பொய்பிரசாரத்தை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். 

முதலில் குற்றச்சாட்டைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். வடக்குக்கு அனுப்பிய நிதி திரும்பிவந்தது என்பது மக்களைக் குழப்புவதாகும். வடக்கு மாகாணத்துக்கான நிதியானது இரண்டு நிறுவனங்களூடாக மத்திய அரசு அனுப்புகிறது. ஒன்று மாகாண சபை, மற்றையது மத்திய அரசால் பல்வேறு அமைச்சர்களின் திட்டங்களை நடைமுறைப்படுத்த மாவட்ட செயலாளர்களூடாக (கச்சேரி) அனுப்பப்பட்டு செலவிடப்படும் நிதி. 

ஆனால் வடக்குக்கு அனுப்பப்பட்ட நிதி என்றவுடன் மக்கள் மாகாண சபைக்கு அனுப்பப்பட்ட நிதியாகவே விளங்கிக்கொள்கின்றமை தவறாகும். மாகாண சபைக்கு அனுப்பப்பட்ட நிதிக்கு மட்டுமே மாகாணசபை பொறுப்பாகும், அந்த நிதி தொடர்பாகவே மாகாண சபை பதிலளிக்க முடியும். மாவட்ட கச்சேரிகளூடாக மத்திய அரசாங்கம் செலவுசெய்த நிதிகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபர்களே பதிலளிக்க வேண்டும். ஏனெனில் இந்த நிதிக்கும் மாகாண சபைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. 

மாகாண சபைக்கு மத்திய அரசு ஒதுக்குகின்ற நிதியை பரந்த அளவில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். 
1. மீண்டெழும் செலவினம் 
2. பிரமாண அடிப்படையிலா நன்கொடை 
3. மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை

இதில் மீண்டெழும் செலவினம் என்பது மாகாண சபை ஊழியர் சம்பளங்கள், கொடுப்பனவுகள் உள்ளிட்ட நிர்வாக செலவீனங்களைக் குறிக்கும். இந்த நிதி தொடர்பாக விமர்சனங்கள் எதுவும்  கிடையாது. 

பிரமாண அடிப்படையிலான நன்கொடை என்பது மாகாண அமைச்சுகளின் மேம்பாட்டுக்கான (தளபாடங்கள், கணணிகள், வாகனங்கள் உள்ளிட்டவை கொள்வனவு செய்தல்) நிதியும், மாகாணசபை உறுப்பினர்களுக்கான தொகுதி அபிவிருத்திக்கான வருடாந்த ஒதுக்கீடும் இதில் அடங்கும். இந்த நிதியும் திரும்பிப் போதல் என்ற பிரச்சினை இல்லை. 

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை என்பது மாகாண அரசின் பல்வேறு அமைச்சுக்களினூடாக செய்யவேண்டிய அபிவிருத்திக்கான நிதியாகும். இவ்வகைக்குள் அடங்கும் நிதியே அபிவிருத்திக்குப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பபடுவதாக பொய்பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது.  

உண்மை நிலை என்னவெனில் அபிவிருத்திக்காக மாகாணசபை கோரிய நிதியில் 20 – 40 வீதமே மத்திய அரசால் அனுமதிக்கப்படுகின்றது. அனுமதிக்கப்பட்ட தொகையை வைத்தே நாம் வரவு - செலவுத் திட்டத்தை தயாரிக்கின்றோம். ஆனால் அனுமதிக்கப்படும் தொகைகூட முழுமையாகவும் உரிய காலத்திலும் வழங்கப்படுவதில்லை. சில வேளைகளில் குறித்த ஆண்டில் அனுமதிக்கப்பட்ட நிதி அடுத்த ஆண்டில் கூட வழங்கப்பட்டுள்ளது.                 

இதில் அனுமதிக்கப்பட் தொகை என்பது மத்திய அரசாங்கம் மாகாணத்துக்கு வழங்குவதற்கு ஒத்துக் கொண்ட தொகையாகும். வழங்கப்பட்ட தொகை என்பது ஒத்துக் கொள்ளப்பட்ட தொகையில் காசாக வழங்கப்பட்ட தொகையாகும். 

அனுமதிக்கப்பட்ட தொகையை நம்பி நாம் திட்டங்களை ஆரம்பிக்கின்ற பொழுதும் குறித்த ஆண்டுக்கு அனுமதிக்கப்பட் தொகையை விட குறைவாகவும் மிக காலம் தாழ்த்தியும் நிதி வழங்கப்படுவதனால் அபிவிருத்தித் திட்டங்களின் தாமதத்திற்கு மத்திய அரசின் மேற்கண்ட வகையிலான செயற்பாடுகளே காரணமாகும். 
மேற்கண்ட அட்டவணையில் காட்டப்பட்டபடி வழங்கப்பட்ட தொகைக்கு மேலாக செலவு செய்யப்பட்டுள்ளது. 

 அந்த ஆண்டில் அனுமதிக்கப்பட்ட ஆனால் வழங்கி முடிக்காத குறை நிதி என்பது மாகாண சபையின் அபிவிருத்தி செலவீன பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே பெறப்படுகின்றது. இதுவே வாடிக்கைகாகவும் உள்ளது. 

இம் மேலதிகமாக செலவு செய்யப்பட்ட நிதியானது ஆண்டு தோறும் மாகாண சபை செலவீனங்களில் இருந்து மிச்சம் பிடிக்கப்பட்டு சேமிக்கப்படும் மாகாண நிதியிலிருந்த பயன்படுத்தப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டில் மட்டும் அவ்வாண்டு டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு 22 மில்லியன் செலவுசெய்யப்படவில்லை. எனினும் இந்நிதி திருப்பி அனுப்பப்படவுமில்லை. மத்திய அரசு மிக காலம் தாழ்த்தி வழங்கியதகாலேயே இந்நிதி குறித்த திகதிக்குள் செலவு செய்யப்படவில்லை. மாறாக அடுத்த ஆண்டு முற்பகுதிக்குள் அது முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது. 
எனவே, அனுப்பப்பட்ட நிதி செலவழிக்கப்படவில்லை என்பது 100 வீதம் பொய்யான தகவல் மட்டுமன்றி அந்தந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட தொகையை விட அதிகமான தொகை செலவு செய்யப்பட்டுள்ளமையே உண்மையாகும். 

அனுமதிக்கப்பட்ட தொகையை விட குறைவான நிதியையும், அதனை தாமதமாகவும் வழங்குவதன் மூலமும்  அபிவிருத்தி வேலைகளை தாமதப்படுத்துவது மத்திய அரசே. 
இலங்கையின் மத்திய, மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஆகியவற்றுக்கியவற்றின் நிதி முகாமைத்துவம் மற்றும் நிதி நிர்வாகம் ஆகியவற்றை மதிப்பீடு செய்து உயர்ந்த மட்டத்திலான செயற்பாட்டை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கு வெற்றிபதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.  

பொதுக் கணக்குகளை மதிப்பீடு செய்வதற்கான இலங்கை பாராளுமன்ற குழுவே இதனை மேற்கொள்கி;றது.  2015 - 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாண சபை பெருமளவு பதக்கங்களை பெற்றிருந்தது. வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் என 32 மாகாண சபை நிறுவனங்கள் இதில் பங்குபற்றி இருந்தன. 

2018 ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபையின் 32 நிறுவனங்களில் 31 நிறுவனங்கள் விருதுகளைப் (பதக்கங்கள்) பெற்றுக் கொண்டது. ஏனைய மத்திய மாகாண அமைச்சுக்கள் திணைக்களங்களை ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சபையின் நிதி முகாமைத்துவம் சிறப்பாக அல்லது வெகு சிறப்பாக இருப்பதனையே மேற்கண்ட தரவுகள் வெளிப்படுத்துகின்றன. 

உண்மை நிலை இவ்வாறு இருக்கையில் பல்வேறு அரச தலைவர்களும் வடக்கு மாகாண சபைக்கு நிர்வாக நடத்த தெரியாது என்றும் வினைத்திறன் அற்றது என்றும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தொடர்ச்சியாக பேசி வருவதானது மாகாண சபை முறையை ஒழிக்கின்ற உள்நோக்கத்துடன் மேற்கொண்டு வருகின்ற பிரச்சாரம் ஆகும். இதுவரை எந்தவொரு ஆதாரத்தையும் முன்வைக்காமல் பல ஆண்டுகளாக இப்பிரச்சாரத்தை அரசாங்கமே மேற்கொள்வதானது இவர்களது தவறான உள்நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றது. 

எனவே வடக்கு மாகாண சபை நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக தொடரும் கொயபல்ஸ் பிரச்சாரத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் நிறுத்த வேண்டும் என்பதுடன் இத்தகைய சதி நோக்கம் கொண்ட பிரசாரத்தை கணக்கில் எடுக்க வேண்டாம் என மக்களை கேட்டுக் கொள்கின்றோம்.  – என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post