ஓரணியில் திரண்டு கோத்தபாயவிற்கு கடிதம் அனுப்பிய தமிழ் கட்சிகள் - Yarl Voice ஓரணியில் திரண்டு கோத்தபாயவிற்கு கடிதம் அனுப்பிய தமிழ் கட்சிகள் - Yarl Voice

ஓரணியில் திரண்டு கோத்தபாயவிற்கு கடிதம் அனுப்பிய தமிழ் கட்சிகள்
தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்து தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை  நடத்த அனுமதி வழங்குமாறு ஜனாதிபதிக்கு கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளனர்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் இல்லத்தில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலேயே கையொப்பம் இடப்பட்டு குறித்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஜனநாயக வழியில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து உயிர் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.இவ்வாறான நிலையில் இலங்கையின் புதிய அரசான கோத்தபாய அரசாங்கம் குறித்த நிகழ்விற்கு பலவிதமான தடைகளை விதித்து வருகின்றது.

கோத்தபாய அரசு தமிழர்களின் மீது பலவிதமான அடக்குமுறைகளை முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இவ்வாறான நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பெயரில் நேற்றைய தினம்(18) தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தவிர்ந்த ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் நல்லூரில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் ஒன்று கூடி கலந்துரையாடி சில தீர்மானங்களை எடுத்து இருந்தனர்.

அதாவது தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிக்க போடப்பட்ட அனைத்து தடைகளும் உடனடியாக ஓரிரு நாட்களில் நீக்கப்பட வேண்டும்.அவ்வாறு அரசாங்கம் செய்யாத இடத்தில் பல தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கான எழுத்துமூல மகஜர் ஒன்றை அனுப்புவதற்காக வடக்கு மாகாண அவைத் தலைவரின் இல்லத்தில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்று கூடினர்.குறித்த கலந்துரையாடலில் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து கொண்டனர்.

இதன்படி தமிழ்தேசிய பரப்பில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து குறித்த மகஜரில் கையொப்பமிட்டனர்.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு மின்னஞ்சல் ஊடாகவும்,பதிவுத்தபால் ஊடாகவும் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.குறித்த மகஜரிற்கு பதில் கிடைக்காத இடத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கட்சி பிரமுகர்கள் தெரிவித்தனர்.

இந்த கலந்துரையாடல் தமிழ் தேசிய கூட்டமைப்பு,தமிழ் மக்கள் தேசிய கூட்டணி,தமிழ் தேசிய பசுமை இயக்கம்,தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
--


0/Post a Comment/Comments

Previous Post Next Post