பட்டினித் தீயாலேயே தன் உடலை கருக்கினார் திலீபன் - கமாலின் கருத்துக்கு ஐங்கரநேசன் பதிலடி - Yarl Voice பட்டினித் தீயாலேயே தன் உடலை கருக்கினார் திலீபன் - கமாலின் கருத்துக்கு ஐங்கரநேசன் பதிலடி - Yarl Voice

பட்டினித் தீயாலேயே தன் உடலை கருக்கினார் திலீபன் - கமாலின் கருத்துக்கு ஐங்கரநேசன் பதிலடி


திலீபன் உண்ணாவிரதம் இருந்தமை தலைவர் பிரபாகரன் அவர்களின் முடிவோ, தெரிவோ அல்லளூ திலீபன் சுயமாகவே இந்த முடிவை எடுத்துத் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் அதற்கான ஒப்புதலைப்; பெற்;றிருந்தார். 

திலீபன் ஒரு அரசியற் போராளி; நோயாளி அல்ல. நல்ல தேகஆரோக்கியத்துடனேயே நல்லூரான் வீதியில் உண்ணாவிரத மேடை ஏறினார். பிணியால் அல்லளூ தன் குடலில் தானே மூட்டிய பட்டினித் தீயாலேயே தன் உடல் கருக்கினார். இவ்வாறு, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பொ. ஐங்கரநேசன் விடுத்திருத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், 

இந்திய - இலங்கை ஒப்பந்தத்துடன் ஏற்பட்ட அமைதிக் காலத்தில் அப்போது யாழ் மாவட்ட அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன், மலையகத்தில் தமிழ் உறவுகளுக்காக வீட்டுத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இருந்தார். ஆனால், ஒப்பந்தத்துக்கு மாறாகத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் புதிதாகக் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டதோடு, சிங்களக்குடியேற்றங்களும் நிகழத் தொடங்கின. நிராயுதபாணிகளாக உலாவிய புலிகள் மீது பிற ஆயுதக் குழுக்கள் தாக்குதலையும் தொடங்கினர். இவற்றைத் தடுக்கும் முகமாகவே திலீபன், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். 

முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான தரப்பினர்களாலும் பேரினவாதிகளாலும் விடுதலைப்புலிகள் பற்றிய பல்வேறு ஊகங்களும், தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றே திலீபன் உண்ணாவிரதத்தால் உயிரிழக்கவில்லைளூ அவர் நோயாளி என்பதாலேயே பிரபாகரன் அவர்களால் உண்ணாவிரதம் இருக்க அனுப்பி வைக்கப்பட்டார் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் கமால் குணரட்ண கூறியிருக்கும் நயவஞ்சகக் கருத்து ஆகும். விடுதலைப்புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்கள் பற்றிய உண்மைகள் ஒருபோதும் தோற்கடிக்கப்படாது. 

திலீபன் அவரது உணவுக்குழாயில் உலங்கு வானூர்தியில் இருந்து சுடப்பட்ட சன்னம் பாய்ந்தமையால் சத்திர சிகிச்சைக்கு ஆளாக நேரிட்டது. இதன்போது அவரது உணவுக் குழாயில் ஆட்டுக்குடல் பொருத்தப்பட்டதாக வதந்தி பரவியது. அறிவியல் உலகத்துக்கு எந்த வகையிலும் பொருந்தாத இந்தப் பொய்யை மெய்யென நம்பும் முட்டாள்களே திலீபனை நோயாளியாக இனங்காண்பர். திலீபன் உடல் வலிமை மாத்திரம் அல்லளூ மனோ வலிமையையும் கொண்டிருந்த ஒருவர் என்பதனாலேயே உணவை மாத்திரம் அல்லாமல் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது அவரால் நோன்பு இருக்க முடிந்தது. 

திலீபன் மலையகத்தில் முன்னெடுக்க விரும்பிய வீட்டுத்திட்டம் பின்னர் அவரது நினைவுநாள் ஒன்றில் விடுதலைப்புலிகளினால் யாழ் மாவட்டத்தில் வாதரவத்தை, பனிப்புலம் போன்ற சில கிராமங்களில் ஏழைஎளிய மக்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டது. ஆனால், உண்ணா நோன்பில் அவர் தமிழினத்தின் நன்மைகருதி முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் இன்றும் அவரது ஆன்மா பசியுடனேயே இருக்கிறது. அவரது உன்னதமான ஜனநாயகப் போராட்டத்தைக் கொச்சப்படுத்திய பேரினவாத அரசு இன்று அவருக்கான அஞ்சலிக்கும் தடைவிதித்திருக்கிறது, அஞ்சலி நிகழ்ச்சிகளுக்குத் தடைபோடலாம். ஆனால், மக்கள் மனங்களில் குடியேறியிருக்கும் திலீபன் பற்றிய எழுச்சி நினைவுகளுக்கு ஒருபோதும் தடைபோட முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post