பாராளுமன்றத்தில் கஜேந்திரன் அரசிற்கு விடுத்துள்ள எச்சரிக்கை - Yarl Voice பாராளுமன்றத்தில் கஜேந்திரன் அரசிற்கு விடுத்துள்ள எச்சரிக்கை - Yarl Voice

பாராளுமன்றத்தில் கஜேந்திரன் அரசிற்கு விடுத்துள்ள எச்சரிக்கை
அரசமைப்பின் 20வது திருத்தச் சட்ட யோசனை நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார் .

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

அரசமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தின் உறுப்புரை 41 ஆ வின் பிரகாரம் கணக்காய்வு சேவை ஆணைக்குழு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள 20வது திருத்த யோசனையின் பிரகாரம் அது முற்றாக நீக்கப்படுகின்றது.உறுப்புரை 153 (1) இன் பிரகாரம் கணக்காய்வாளர் நாயகம் ஒருவர் தகைமை பெற்ற கணக்காய்வாளராக இருத்தல் வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், புதிதாக வரவுள்ள 20வது திருத்தச் சட்ட யோசனையின் பிரகாரம் தகைமை பெற்ற கணக்காய்வாளராக இருத்தல் வேண்டும் என்பது நீக்கப்பட்டுள்ளது.உறுப்புரை 153 (4) இன் பிரகாரம் அரசமைப்புப் பேரவையின் விதப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை ஜனாதிபதி நியமிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.ஆனால், புதிதாக வரவுள்ள 20வது திருத்த யோசனையில் அரசமைப்புப் பேரவையின் எந்தவொரு விதப்புரையும் இன்றி ஜனாதிபதி ஆளொருவரை நியமிக்கலாம் என்றவாறு மாற்றப்பட்டுள்ளளது.உறுப்புரை 154 (1) இன் பிரகாரம் அரச திணைக்களங்களதும், ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தினதும், ஜனாதிபதி செயலாளர் அலுவலகம், பிரதம அமைச்சரது செயலாளர் அலுவலகம் என்பவற்றின் கணக்குகளை கணக்காய்வு செய்தல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.ஆனால், புதிய 20வது திருத்தச் சட்ட வரைவில் ஜனாதிபதி செயலாளர் அலுவலகம், பிரதம் அமைச்சரது செயலாளர் அலுவலகம் என்பன நீக்கப்பட்டுள்ளது.உறுப்புரை 154 (2) இல் அரச கம்பனிகளின் கணக்குகளைக் கணக்காய்வு செய்தல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், புதிய 20வது திருத்த யோசனையில் குறித்த அரச கம்பனி என்பது நீக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பாரிய ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அரச கம்பனிகளைக் கணக்காய்வு செய்யும் பொறுப்பு கணக்காய்வாளர் நாயகத்தில் பொறுப்புக்கள் அதிகாரங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.உதாரணமாக ச.தொ.ச. நிறுவனம், அரச கம்பனிகளில் 50 வீதத்துக்கும் அதிகமான பங்குகளை அரசு உடமையாகக் கொண்டுள்ளது. இந்நநிலையில் இவ்வாறான செயற்பாடானது பாரிய ஊழல், மோசடிகளுக்கே இட்டுச் செல்லும்.உறுப்புரை 154 (ஏஐ) இன் பிரகாரம் பகிரங்க கணக்குகளை கணக்காய்வு செய்து நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதற்கும் கணக்காய்வாளர் நாயகத்தின் கடமைகளும் பொறுப்புக்களும் அதிகாரங்களும் 20வது திருத்த யோசனையில் பறித்தெடுக்கப்பட்டுள்ளது.எனவே , இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நாட்டில் பாரிய நிதி மோசடிகளும், ஊழல்களும் இடம்பெறுவதற்கே வழிவகுக்கும்.அத்துடன் நாட்டில் ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் ஒன்றாகவும் இது காணப்படுகின்றது. எனவேதான் 20வது திருத்தம் நிறைவேற்றப்படக்கூடாதென வலியுறுத்துகின்றோம்.மேலும் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் 8 தொடக்கம் 10 வருடங்கள் கடமையாற்றியுள்ளபோதும் அவர்களுக்கான இடமாற்றங்கள் பலருக்கு வழங்கப்படவில்லை.இதன் காரணமாக விரக்தியடைந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் அண்மையில் மன்னார் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.எனவே, கடமையாற்ற வேண்டிய காலத்தை நிறைவு செய்துள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.அம்பாறை மாவட்டம், கல்முனை தமிழ்ப் பிரிவுக்கு இன்னமும் கணக்காளர் நியமிக்கப்படவில்லை. அதன் காணரமாக தமிழ் மக்கள் பாரிய இடர்களை எதிர்நோக்குகின்றனர். எனவே, உடனடியாக கல்முனை வடக்கு தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்துக்குத் தனியான கணக்காளர் ஒருவரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post