விக்கினேஸ்வரனிற்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக டெனீஸ்வரன் அறிவிப்பு.. - Yarl Voice விக்கினேஸ்வரனிற்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக டெனீஸ்வரன் அறிவிப்பு.. - Yarl Voice

விக்கினேஸ்வரனிற்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக டெனீஸ்வரன் அறிவிப்பு..தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் மீதான வழக்கை விலக்கிக் கொள்ளப் போவதாக தொலைபேசி வழியாக அவரிடமே கூறிவிட்டேன் என வடக்கு முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபைக்குள் எழுந்த ஊழல் குற்றச்சாட்டையடுத்து, அமைச்சர்கள் பதவிநீக்கம் இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாக, பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கின் தீர்ப்பு டெனிஸ்வரனிற்கு சாதகமாக அமைந்திருந்தும், அதை விக்னேஸ்வரன் நடைமுறைப்படுத்தவில்லை, அவர் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் என டெனிஸ்வரன் சார்பில், எம்.எ.சுமந்திரனின் கனிஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ மீளவும் வழக்கொன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் இறுதிக்கட்டம் நெருங்கியுள்ளது. நாளை (15) தொடக்கம் 3 நாட்கள் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடந்து தீர்ப்பளிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் சுமார் 4 நாட்களின் முன்னர் விக்னேஸ்வரனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டெனிஸ்வரன், வழக்கை மீளப்பெற போவதாக விக்னேஸ்வரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்திருந்தார்.

டெனிஸ்வரன் தொடர்பு கொண்டபோது, விக்னேஸ்வரன் கதிர்காம கந்தன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

மேலும் டெனிஸ்வரன் தெரிவித்ததாவது,

“விக்னேஸ்வரன் ஐயாவை சிறையில் அடைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் நான் வழக்கை தொடரவில்லை. எனக்கு நேர்ந்த அநீதியொன்றில் நீதி கோரியே வழக்கு தொடர்ந்தேன். ஊழல் குற்றச்சாட்டுக்கள் அமைச்சர்கள் சிலர் மீது சுமத்தப்பட்டபோது அனைவரையும் நீக்கினார்கள். 

மாவீரர் குடும்பங்கள், போராளிகள் மறுவாழ்வு திட்டமொன்றை ஜப்பானிய நிதியுதவியில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்ததால் அதை முடிக்கும்வரை அவகாசம்- 2 மாதங்கள்- தருமாறு கோரினேன். அதை அவர்கள் ஏற்கவில்லை. இதனாலேயே வழக்கை தொடர்ந்தேன்.

நான் குற்றமற்றவன் என்பதை நீதிமன்றம் உறுதிசெய்து விட்டது. இப்பொழுது நீதிமன்ற அவமதிப்பு வழக்காகியுள்ளது. எனக்கு எப்படியான தீர்ப்பு வந்தது என்பதற்கு அப்பால், இப்பொழுது விக்னேஸ்வரன் ஐயாவின் கரங்களை பலப்படுத்த வேண்டிய தேவை எங்கள் எல்லோருக்குமுள்ளது. 

அவர் மீது மாகாணசபை நிர்வாக விமர்சனங்கள் இருந்தாலும், தற்போது நாடாளுமன்றத்தில் எந்த தமிழ் எம்.பியும் தொடாத- எமது வரலாற்றை அங்கு பதிவு செய்யும் முயற்சியில் விக்னேஸ்வரன் ஐயா ஈடுபட்டுள்ளார். இதுவரை தமிழ் எம்.பிக்கள் யாரும் அதை செய்யவில்லை.

இதனாலேயே அவரை பலரும் குறிவைக்கிறார்கள். இனப்பற்றுள்ளவன் என்ற அடிப்படையில் இப்போது அவரை பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளதாக கருதுகிறேன். நான் என்ற சிந்தனைக்கு அப்பால், நாம் என சிந்திக்க வேண்டிய தருணம் இது.

இதனால்தான், இந்த பரபரப்புக்கள் ஊடகங்களில் ஏற்படுவதற்கு முன்னரே- நான்கு நாட்கள் முன்னர்- அவரை தொலைபேசியில்அழைத்து, இதைப்பற்றி பேசிவிட்டேன்.

நாளையு வழக்கு விசாரணையில், இந்த வழக்கை விலக்கிக் கொள்வதாக எமது சட்டத்தரணி அறிவிப்பார். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், சிக்கலின்றி இந்த விவகாரம் முடிந்து விடும்.

வழக்கை விலக்கிக் கொள்வதென நான் இப்பொழுது முடிவெடுக்கவில்லை. அதை சில வாரங்களின் முன்னரே எடுத்து விட்டேன். எனது 8 வயது மகன் பேஸ்புக் பார்ப்பார். 

அதன்மூலம் அரசியல் நிலவரம் அவருக்கு ஓரளவு தெரியும். அண்மையில் நாங்கள் வாகனத்தில் போய்க்கொண்டிருக்கும் போது, இதை என்னிடம் கேட்டார். “அப்பா… உங்கள் வழக்கினால் விக்னேஸ்வரன் ஐயா சிறைக்கு போவாரா? வயதான ஒருவர் கஸ்டப்படுவார் இல்லையா?“ என என்னிடம் கேட்டார். அதற்கு பின்னர் பலமுறை கேட்டு விட்டார்.

அப்பொழுதே வழக்கை விலக்கிக் கொள்ளலாமா என யோசிக்க ஆரம்பித்தேன். அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரன் ஐயாவிற்கு எழுந்த நெருக்கடிகளை பார்த்து விட்டு, இந்த முடிவை உறுதியாக எடுத்தேன்“ என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post