வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து துறைசார் செயலாளர் உடனான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் திருமதி p.s.m சாள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது
இக்கலந்துரையாடலில் வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து துறைசார் செயலாளர்கள், ஆளுநரின் செயலாளர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கலந்துரையாடலில் துறைரீதியான கடந்தகால செயற்பாடுகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், மற்றைய மாகாணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து தேவையான விடயங்களை இனங்காணவும், தடையாக உள்ளவற்றை இனங்கண்டு தேவையானபோது சட்ட ஆலோசனை பெற்று அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் வைத்தியர்களின் நாளாந்த கடமை நேரங்களை அவதானித்து, இறுக்கமான மேற்பார்வையை நடைமுறைப்படுத்தும்படி நிர்வாகத்தினரிடம் அறிவுறுத்தினார்.
அத்துடன் வைத்தியசாலைகளில் காணப்படும் வைத்தியர்களின் பற்றாக்குறை, வழங்கப்படவுள்ள வைத்திய நியமனங்கள், வைத்தியர்களின் விடுதி வசதி தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் ஜனாதிபதி அவர்கள் வடக்கிலுள்ள அனைத்து ஆளணி வெற்றிடங்களை பூர்த்தி செய்யும்படி தெரிவித்துள்ளார், அதற்கமைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் அவர்களால் பணிக்கப்பட்டது. அத்துடன் ஆஸ்திரி வைத்தியசாலை தொடர்பாக மேற்கொள்ளபட்ட பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் அதனை செயற்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் கடமை பட்டியல் வழங்கப்பட்டுள்ளதா? அக்கடமைகளை மேற்கொள்ள இடமளிக்கப்பட்டுள்ளதா? என அவதானிக்கும்படி கணக்காய்வாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியதோடு,
விவசாய நாற்று மேடை உற்பத்தியாளர்களை இனங்கண்டு அவர்களின் நாற்று தரங்களை உறுதிப்படுத்தி அவர்களுக்கான பதிவுகளை மேற்கொண்டு பணம் வெளிச்செல்லலை கட்டுப்படுத்துவதுடன், இனங்காணப்பட்ட பயன்படுத்தப்படாதுள்ள விவசாய நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும் புதிய விவசாய பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்தவும் அறிவுறுத்தினார்.
மேலும் நிதி மற்றும் மூலதன செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஆளுநர் அவர்கள் தற்போதைய மூலதன செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் தற்போதைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும்போது டெங்கு நோய் பரம்பலை கவனத்தில் கொண்டு செயற்படுமாறும்,
மேலும் கட்டட நிர்மாண பணியாளர்களை தெரிவுசெய்யும் போது அவர்களது கடந்தகால செயற்பாட்டு அறிக்கைகளை கவனத்தில் கொண்டு தெரிவுசெய்யுமாறும் அவர்களுக்கு குறித்த காலப்பகுதியை நிர்ணயித்து அதற்கான காலப்பகுதிக்குள் வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதனை கண்காணிக்குமாறும் தெரிவித்தார்.
Post a Comment