யாழ் மத்திய பேருந்து நிலைய வியாபார கடைகள் தொடர்பில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு - Yarl Voice யாழ் மத்திய பேருந்து நிலைய வியாபார கடைகள் தொடர்பில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு - Yarl Voice

யாழ் மத்திய பேருந்து நிலைய வியாபார கடைகள் தொடர்பில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு



யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் மாநகரசபையின் எவ்வித அனுமதியுமின்றி இயங்கிவரும் மணிக்கடைகள், பழங்கள் விற்பனை, சிற்றூண்டிகள் விற்பனை உள்ளிட்ட தற்காலிக கடைகளை அகற்றுவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ் மாநகர முதல்வருக்கும் - 67 தற்காலிக கடை நடாத்துனர்களுக்குமிடையில் யாழ் மாநகர பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட முதல்வர் ஆனல்ட் அவர்கள் எம்மால் முன்மொழியப்பட்டு மத்திய அரசால் முன்னெடுக்கப்படவுள்ள யாழ் மத்திய பேரூந்து நிலையம் மற்றும் அதனுடன் அமைந்த வர்த்தக கட்டடத் தொகுதி செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளும், உயர் மட்ட கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டு கடந்த வருடம் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் 300 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த பகுதிக்கு முன்னாள் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் நேரடிக் களவிஜயம் செய்து பார்வையிட்டிருந்தார். மேலும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினதும், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்களினதும் குழுக்கள் விஜயம் செய்து அவதானித்து பல்வேறு அறிக்கைகளையும் முன்வைத்திருந்தனர். 


குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அனுமதியற்ற விற்பனை நிலயங்களினால் அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுவதாக அவ் அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் காரணமாக குறித்த திட்டம் உரிய காலப்பகுதியில் ஆரம்பிக்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டது.

எமது அனுமதியின்றி தற்காலிகமாக கடைகளை நடாத்திவரும் 67 கடை நடாத்துனர்களுக்கும் பல்வேறு தடவைகளில் எழுத்து மூலமாக கடைகளை அகற்றி குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டிருந்தோம். 

இருப்பினும் எவரும் குறித்த அறிவித்தலை கருத்திற் கொண்டு செயற்படாமை எமக்கு மிகுந்த சங்கடங்களை உருவாக்கியுள்ளது. மாநகரின் நகர அபிவிருத்திக்கு தடையாக தாங்கள் இருந்துவிடக் கூடாது என்பதை அன்புரிமையோடு கூறிவைக்க விரும்புகின்றேன்.

குறித்த திட்டத்தை இவ்வருட இறுதிக்குள் ஆரம்பித்து வைக்க அடுத்த கட்ட முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இடத்தை திட்டத்திற்கு ஏற்றவாறு ஒழுங்குபடுத்திக் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில்தான் திட்டத்தை விரைவாக ஆரம்பிக்க முடியும். அனைவரும் இதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கி தத்தமது கடைகளை அகற்றுவதற்கு முன்வருமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் மாநகரசபை கட்டளைச் சட்டத்தின் பிரிவு 42யு(2) இற்கமைய மாநகரசபையின் அனுமதியற்ற கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், இவ் அதிகாரத்திற்கு மேலதிகமாக குறித்த அனுமதியற்ற கடைகளை அகற்றுவதற்கு கடந்த 2020.09.28 ஆம் திகதிய கடிதம் மூலம் ஆளுநரின் அனுமதியும் கிடைத்துள்ளமையினையும் முதல்வர் தெரிவித்ததோடு, அவ்வாறு அன்றி அனைவரும் உடன்பட்டு அனுமதியற்ற கடைகளை அகற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த இடத்தில் அமைக்கப்படும் வர்த்த கட்டடத் தொகுதியில் இங்கு தற்காலிக கடை நடாத்திய 67 பேருக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடை வழங்குவதை மாநகரசபை தற்பொழுது உறுதி செய்யுமானால் தாம் கடைகளை அகற்றி அபிவிருத்தி திட்டம் முடியும் வரை பிறிதொரு இடத்தை நோக்கி நகர்வது குறித்து மாநகரசபைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று குறிப்பிட்டனர்.

இதற்கு பதிலளித்த முதல்வர் அவ்வாறு நேரடியாக வழங்க முடியாது என்றும், மாநகரசபை சட்ட விதிமுறைகளுக்கு அமையவே கடைகள் வழங்கப்படும் என்றும், வேண்டுமானால் பல வருடங்களாக கடைகளை நடாத்திய தங்களது வாழ்வாதாரமும், தங்களது குடும்பங்களும் பாதிக்கப்படக் கூடாது என்ற மனிதாபிமான அடிப்படையில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்து உங்களில் சில பிரதிநிதிகளையும் குறித்த கலந்துரையாடலில் பங்கெடுக்கச் செய்து ஆளுநரின் அனுமதியுடன், சபையில் சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் பேரூந்து நிலைய வர்த்தக கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டு எதிர்காலத்தில் கடைகள் வழங்கப்படும் பொழுது இந்த 67 பேரும் விண்ணப்பிக்கின்ற போது முன்னிலை அடிப்படையில் உள்வாங்குவது குறித்து மாநகரசபை சாதகமாகப் பரிசீலீக்க வேண்டும் என்ற சபைத் தீர்மானத்தை எடுத்து ஆளுநரின் அனுமதி பெற்று அதனை மாநகரசபையின் தற்போதைய சபை இல்லாது விடினும் தாங்கள் பாதிப்படையாத வண்ணம் தாங்களுக்கான உறுதிப்படுத்தலை நாம் செய்து தர முயற்சிக்கின்றோம் என்று முதல்வர் கூறினார்.

தற்காலிக கடை நடாத்துனர்கள் கருத்துக்களை முன்வைத்தபோது தமது குடும்ப நிலமைகள், வருமானமின்மை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர். மேலும் இத்தனை வருடமாக கடைகளை நடாத்தி வந்த எமக்கு குறித்த பகுதியில் பேரூந்து நிலைய அபிவிருத்தி திட்டம் நிறைவடையும் வரை பிறிதொரு இடத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் எம்மால் இடங்களை அடையாளம் செய்ய முடியாது என்றும், மாநகரசபைக்குள் பொது இடங்கள் இல்லை என்றும், தாங்கள் அனைவரும் ஒன்றாக அபிவிருத்தி திட்டம் நிறைவடையும் வரை தற்காலிக விற்பனைகளை மேற்கொள்ள முடியாது என்றும், குழுக்களாக பிரிந்து ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களை அடையாளம் செய்து தரும் பட்சத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் குறிப்பிட்டார். அதற்கு தமக்கு இரு நாட்கள் கால அவகாசம் வழங்குமாறும், தாம் அதற்குள் குழுக்களாக இணைந்து இடங்களை அடையாளம் செய்து விட்டு மாநகரசபைக்கு அறிவிப்பதாக குறிப்பிட்டனர்.

அந்த வகையில் தற்காலிக கடை நடாத்துனர்கள் இரண்டு நாட்களுக்குள் இடங்களை அடையாளம் செய்து அறியத்தந்ததன் பின்னர் ஆளுநர் தலைமையிலான கலந்துரையாடலுக்குச் செல்வோம் என்று தீர்மானிக்கப்பட்டு கலந்துரையாடல் நிறைவு செய்யப்பட்டது.

இக் கலந்துரையாடலில் யாழ் மாநகர ஆணையாளர், செயலாளர், பிரதம வருமானவரிப் பரிசோதகர், மாநகரசபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post