மக்களுக்காக மரணித்தவர்களை நினைவுகூரும் உரிமையையும் தார்மீகக் கடமையையும் தடுப்பதுதான் ஜனநாயக சோசலிசக் குடியரசா? சுரேஷ் கேள்வி - Yarl Voice மக்களுக்காக மரணித்தவர்களை நினைவுகூரும் உரிமையையும் தார்மீகக் கடமையையும் தடுப்பதுதான் ஜனநாயக சோசலிசக் குடியரசா? சுரேஷ் கேள்வி - Yarl Voice

மக்களுக்காக மரணித்தவர்களை நினைவுகூரும் உரிமையையும் தார்மீகக் கடமையையும் தடுப்பதுதான் ஜனநாயக சோசலிசக் குடியரசா? சுரேஷ் கேள்வி
தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தம் இன்னுயிரை ஈந்த போராளிகளையும் பொது மக்களையும் 
நினைவுகூர்வதென்பது தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை உரிமையாகும். அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் 
27ஆம் திகதியன்று தமக்காக மரணித்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பதுதான் ஜனநாயக சோசலிச குடியரசு ஆட்சியா 
என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் 
பேச்சாளருமான சுரேஷ; க.பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு: 
யுத்தத்தினால் மடிந்து போன மக்களை போராளிகளை நினைவு கூர்வதற்கான ஒரு நடைமுறையை இலங்கை அரசாங்கம் எப்பொழுதும் எதிர்த்தே வந்திருக்கின்றது. 

நினைவு கூர்வதைக்கூட இரகசியமாகச் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய 
நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு வந்திருக்கிறது. தமது மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்களை போராளிகள் என்று பார்ப்பதற்கு தமிழ் மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் 
போராளிகள் என்பவர்கள் பயங்கரவாதிகள். 

எம்மைப் பொறுத்தவரையில், அவர்கள் விடுதலை வீரர்கள், புனிதர்கள், எமது விடுதலைக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்கள். ஆகவே அவர்களை நினைவு கூர்வதற்கான சகல 
உரித்தும், தகைமையும் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. இது சர்வதேச ரீதியில் ஏற்படுத்தப்பட்ட நியமமும்கூட. எமது 
பிள்ளைகளுக்காக எமது உறவுகளுக்காக எமது விடுதலைக்குப் போராடியவர்களுக்காக நாம் கண்ணீர் சிந்துவதென்பதும் நினைவு கூர்வதென்பதும் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதும் எமது அடிப்படை மனித உரிமையும் தார்மீகக் 
கடமையுமாகும்.

ஆனால், எம்மை அடக்கியாள முற்படும் அரசாங்கமானது, எமது நினைவுச் சின்னங்களை அடித்து நொறுக்கியது. 
துயிலும் இல்லங்களை தரைமட்டமாக்கியது. எமக்காக மரணித்தவர்களை நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது என்று இப்பொழுது 
கூறிவருகின்றது. நாம் இன்னமும் அடக்குமுறையின் உச்சத்தில் இருக்கிறோம் என்பதைத்தான் அரசாங்கம் வருடாந்தம் வெளிக்காட்டி நிற்கின்றது. 

பயங்கரவாதிகளை நினைவுகூரக்கூடாது என்ற அடிப்படையிலும், கோவிட்-
19 வைரஸ் தாக்குதல்கள் என்ற அடிப்படையிலும் மீண்டும் பொலிசாரும் இராணுவத்தினரும் வடக்கு-கிழக்கில் 
நினைவுகூர்வதற்கு எதிரான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர். 

துயிலும் இல்லங்களை துப்புரவு செய்பவர்கள் விசாரணைக்குட் படுத்தப்படுகிறார்கள் அல்லது அத்தகைய செயல்களிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். ஒன்று கூடுவது 
சட்டத்திற்கு முரணானது என்று கூறுகின்றனர். 

ஆகவே அரசாங்கம் தொடர்ச்சியாக இவ்வாறான அடக்குமுறை 
நடவடிக்கைகளைக் கைவிட்டு தமிழ் மக்கள் தமது மறித்துப் போன உறவுகளை நினைவுகூர்வதற்காக அவர்களுக்கு உள்ள உரிமையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டில் இருக்கக்கூடிய சுகாதார அச்சுறுத்தலான 
சூழ்நிலையில், நினைவு கூர்தல் எந்த அடிப்படையில் நடைபெற வேண்டும் என்ற வழிமுறையைக் குறிப்பிட 
வேண்டுமே தவிர, அதற்குத் தடைவிதிப்பதென்பது அநாகரிகமானதும் சட்டத்திற்கு முரணானதுமாகும்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிரை ஈந்தவர்களை நினைவு கூர்வது என்பதை வருடாந்தம் ஒரு 
பிரச்சினையாகவே அரசாங்கங்கள் மாற்றி வருகின்றன. நினைவு கூர்தலுக்காக ஒவ்வொரு வருடமும் தமிழ் மக்கள் போராட வேண்டியுள்ளது. 

தார்மீக அடிப்படையிலோ அல்லது சட்ட அடிப்படையிலோ அரசாங்கத்தினால் இந்த விடயங்கள் கையாளப்படுவதாக இல்லை. மாறாக, பொலிசாரையும் தமது படையினரையும் பாவித்து, தாம் 
விரும்பியவாறு அவர்கள் வழிநடத்தப்பட்டு அதனூடாக இத்தகைய நிகழ்வுகள் தடைசெய்யப்படுகின்றன. 

இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், ஒவ்வொரு அரசாங்கமும் தாம் விரும்பியவாறு, இது தொடர்பில் தான்தோன்றித்தனமான முடிவினையே எடுக்கின்றன. எனவே இது நிறுத்தப்படவேண்டும்.

 தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரும் புதிருமாகப் பேசுவதை விடுத்து, இவ்வாறான பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண முன்வரவேண்டும்.


சுரேஷ; க. பிரேமச்சந்திரன்
தலைவர்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
இணைப்பேச்சாளர்
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

0/Post a Comment/Comments

Previous Post Next Post