யாழ் ஊடக அமையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படிருப்பதாவது..
நவம்பர் 2 ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை விலக்கை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்.
நடந்து முடிந்த ஊடகப் படுகொலைகள்,காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்க தயாரில்லாத ஒரு நாடாக இவ்வாண்டினையும் இலங்கை கடந்து செல்கின்றது.
இலங்கையின் ஊடகப்பரப்பில் கூடிய நெருக்கடிகளையும் மரணங்களையும் எதிர்கொண்ட தரப்பாக தமிழ் ஊடகத்தரப்பே இருந்துவருகின்றது.
ஆனாலும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்காத அரசாக இலங்கை இருந்து வருவதால் பொறுப்பு கூறல் என்பதும் கண்டுகொள்ளப்படாதேயிருந்து வருகின்றது.
2000ம் ஆண்ல் பிபிசி ஊடகவியலாளன் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் ஊடகப்பரப்பின் மீதான ஊடகப்படுகொலை கலாச்சாரம் 39 இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களை காவு கொண்டு நிற்கின்றது.
அதேவேளை நூற்றுக்கணக்கிலா ஊடகவியலாளர்கள் ஊடகப்பணியிலிருந்து விலகவும் நாட்டை விட்டு வெளியேறவும் இத்தகைய சூழலே காரணமாகியிருந்தது.
ஆனாலும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒரு குற்றத்திற்கு கூட நீதி வழங்கப்படாத வரலாற்றைக் இலங்கை கொண்டிருப்பதை யாழ்.ஊடக அமையம் பதிவு செய்ய விரும்புகின்றது.
இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது போன்று ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்போம் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த அரசு கடந்த ஆட்சியின் போது பல சம்பவங்கள் குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருந்தாலும், அவை மந்த கதியிலேயே நகர்கின்றன. முன்னாள் பிரதமர் ஒருவரோ விசாரணை செய்ய அதிகாரிகள் இல்லாதிருப்பதாக விளக்கமளித்திருந்தார்.
ஜனாதிபதி,பிரதமர் மற்றும் ஊடக அமைச்சரை சந்தித்து ஊடகப்படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளை வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள் கோரியிருந்த போதும் அதிசயங்கள் ஏதும் நடந்திருக்கவில்லை.
நாட்டின் வரலாற்றில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஒரு சிலவே.அவற்றிள் கிடப்பில் போடப்பட்டுள்ள தர்மரத்னம் சிவராம் கொலை தொடர்பான வழக்கு ஒன்றாகும்.
நிமலராஜன் கொலை தொடர்பிலான வழக்கிற்கும் என்ன நடந்ததென்பது தெரியாது.
மற்றையது பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கு.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவத்தில் முக்கிய சந்தேக நபர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகி, தான் இதற்கு முன் வழங்கிய சாட்சியம் நிர்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார். இவ்வாறு கூறியுள்ளதானது, வழக்கில் ஒரு பாதகமான திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதையே தெளிவாகக் காட்டுகிறது.
மறுபுறம் இப்போதிருப்பது ஊடகவியலாளர்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் இடம்பெற்ற காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் ஆகும். இந்த நிலையில் நீதியான விசாரணைகள் இடம்பெறுமா என்ற கவலையை நீதிக்காக குரல் எழுப்பும் ஊடக சமூகத்தினரிடையே ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 22 ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்தம், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் சுயாதீனமாக நடத்தப்படுமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
20 வது திருத்தத்தின்படி, இலங்கையின் அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு நியமிக்கப்படும் காவல்துறை அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து இதற்கு முன் செய்யப்படாத வகையில் விசாரணைகளை மேற்கொள்வார்களா?, அத்தகைய நீதிபதிகள் சுயாதீனமாக இருப்பார்களா? என்ற கேள்விகள் இந்த துறையில் எழுந்துள்ளன.
ஏற்கனவே புதிய அரசின் ஊடக அமைச்சர் காணாமல் போனவர்கள் நாட்டை விட்டு தப்பி சென்று புலம்பெயர் தேசங்களில் இருக்கலாமென்ற வியாக்கியானத்தை செய்துள்ளார்.
இந்தப் பின்னணியில்தான், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர் 2 ஆம் தேதி இலங்கையில் அனுஸ்டிக்கப்படுகிறது.
யார் ஆட்சியில் இருந்தாலும் ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவது ஒவ்வொரு அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாகும்.
மாறி மாறி யார் ஆட்சியிலிருந்தாலும் நடந்தேறிய ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராக சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையிலான விசாரணை என்பது முக்கிய கோரிக்கையாக யாழ்.ஊடக அமையத்தால் முன்வைக்கப்பட்டுவருகின்றது.
இது தொடர்பாக புதிய அரசாங்கத்தையும் சர்வதேச ஊடக மைப்புக்களையும் யாழ்.ஊடக அமையம் நவம்பர் 2 ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை விலக்கை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தில் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது.
Post a Comment