மகர சிறை கைதிகள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி - Yarl Voice மகர சிறை கைதிகள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி - Yarl Voice

மகர சிறை கைதிகள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி




மகர சிறைச்சாலை கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் எட்டு கைதிகள்    உயிரிழந்துள்ளனர். நாற்பதிற்கும்  மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர். இச்சம்பவத்தை எமது கட்சி வன்மையாக கண்டிக்கிறது என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ.மகேந்திரன் விடுத்துள்ள ஊடக செய்தியில் குறிப்பிடுள்ளார். 

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் சிறைசாலைகளையும் ஆக்கிரமித்து வருகின்றது. தற்போது வரை 700 இற்கும் மேற்பட்ட சிறை கைதிகள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில்  சிறைசாலைகளில் உள்ள கைதிகள் தமது பிணை வழங்கலை  விரைவு படுத்தவும், வழக்குகளை விரைவுப்படுத்தவும், சிறைச்சாலைகளில் அடிப்படை வசதிகளை அதிகரிக்கவும் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையிலேயே சிறை கைதிகள் மீதான இத்தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இது இந்த அரசாங்கத்தின் ஏதேச்சதிகார போக்கினை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது .
கோத்தபாய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் சாதாரண மக்களின் கருத்துரிமையை நசுக்கி வருகின்றது. நீதி கோரும் மக்கள் மீதும், மக்கள் செயற்பாட்டாளர்கள் மீதும் அதிகாரத்தையும் ஆயுத பலத்தையும் தொடர்ச்சியாக பிரயோகித்து வருகின்றது. 

அதேவேளை கடந்த காலங்களில் கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், அரச சொத்துக்களை திருடியவர்கள் வரிசையாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். மறுபுறத்தில் சிறு சிறு குற்றங்களுக்காக  சிறையில் அடைக்கப்பட்டுள்ளோருக்கு  நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு மாறாக அவர்கள் மீது  அரச பயங்கரவாதத்தை பிரயோகித்து வருகின்றது. சிறைச்சாலைகளில் கைதிகள் கொல்லப்படுவதும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும் இந்த நாட்டில் சாதாரண  நிகழ்வாக மாறியுள்ளது. இவ்வாறானதொரு தாக்குதலில் வெளிக்கடை சிறையில் நாற்பதிற்கும்  மேற்பட்ட கைதிகள் கொல்லப்பட்டது 2012 ம் ஆண்டு இதே மாதம் இதே நாளிலேயாகும். அதன் சூத்திதாரிகள் இன்று ஆதிகாரத்தின் உச்சத்தில் இருந்து வருகிறார்கள். 

இங்கு அரசியல் வாதிகளுக்கும் அதிகாரம் படைத்தோருக்கும் ஒரு நீதி, சாதாரண மக்களுக்கு ஒரு நீதி என்பதற்கு எதிராக போராட அனைத்து மக்களும் முன்வர வேண்டும். 

மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற  மமதையில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் மக்கள் விரோத ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவும் , சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், மக்களின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கவும்  ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரி சக்திகள் அணித்திரள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post