புரெவி புயலால் கடலில் உயிரிழந்த செல்வக்குமாரின் குடும்பம் நிர்க்கதி! -உதவிக்கரம் நீட்டுவோர் முன்வருக- - Yarl Voice புரெவி புயலால் கடலில் உயிரிழந்த செல்வக்குமாரின் குடும்பம் நிர்க்கதி! -உதவிக்கரம் நீட்டுவோர் முன்வருக- - Yarl Voice

புரெவி புயலால் கடலில் உயிரிழந்த செல்வக்குமாரின் குடும்பம் நிர்க்கதி! -உதவிக்கரம் நீட்டுவோர் முன்வருக-




சுழிபுரம் - பெரியபுலோவில் இருந்து புரெவி புயல் அன்று பொன்னாலைக் கடலில் தொழிலுக்கு சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்த செல்வராசா செல்வக்குமாரின் குடும்பம் தற்போது எந்தவித உதவியும் இன்றி நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளது. 

வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் எல்லைக்குள், ஜே-172 கிராம சேவையாளர் பிரிவில் இவர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு வசிப்பதற்கு வீடு இல்லை. சிறிய கொட்டகை ஒன்றில் 3 குடும்பங்கள் வசிக்கின்றனர். 

மரணமடைந்த செல்வக்குமாரின் வயதான தாய் தந்தை. செல்வக்குமாரின் சகோதரியும்  இரு பிள்ளைகளும் (இவர் கணவனால் கைவிடப்பட்டவர், மூத்த மகன் ஊனமுற்றவர்) இவர்களோடு செல்வக்குமாரின் மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் பெரும் கஷ்டத்தின் மத்தியில் அக்குடிசையில் வசிக்கின்றனர். 

நான்கு பிள்ளைகளும் கல்வி கற்கின்றனர். மூத்த மகள் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்றார். மூவர் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியிலும் ஒருவர் திருவடிநிலை சைவத்தமிழ் கலவன் பாடசாலையிலும் கற்கின்றனர். 

செல்வக்குமாரின் உழைப்புடன், குடும்பத்தில் உள்ள பெண்கள் அவ்வப்போது வயல்களில் கூலி வேலைக்கு சென்று சீவியத்தை நடத்தி வந்தனர். இப்போது அவர் மரணமடைந்தமையால் எந்தவித வருமான மார்க்கமும் இன்றி தவிக்கின்றனர். சமுர்த்தி உதவித்திட்டத்திலும் இவர்கள் உள்வாங்கப்படவில்லை. 

பிள்ளைகள் நால்வரும் நடந்து பாடசாலைக்கு செல்கின்றனர். ஒரு துவிச்சக்கரவண்டிகூட இவர்களிடம் இல்லை. பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். பிரத்தியே வகுப்புகளுக்கு இதுவரை சென்றதில்லை. 

இக்குடும்பத்திற்கு காணி ஒன்றை வாங்கி அதில் ஒரு கொட்டகை அமைத்துக் கொடுத்தால் எதிர்காலத்தில் அரச வீட்டுத்திட்டம் கிடைக்கும் எனவும் ஊரில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.  

சுழிபுரத்தில் இவர்களின் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அருகே இரு பரப்பு காணி உள்ளதெனவும் அதை வாங்கிக்கொடுத்தால் குறித்த உறவினரின் பராமரிப்பில் இவர்கள் இருப்பார்கள் எனவும் ஊர் மக்கள் கூறினர். 

எனினும், குறித்த காணி 15 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் அதை வாங்குவதற்கு கஷ்டமாக உள்ளது எனவும் ஊரவர்கள் தெரிவிக்கின்றனர். பலர் இணைந்தால் அதை செயற்படுத்த முடியும் எனவும் கூறுகின்றனர். 

தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் வசிக்கும் கொடையாளர்கள் இக்குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டுமாறு கோரப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post