தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு துணிவாக குரல் கொடுத்தவர் ராஜப்பு ஜோசப் - யாழ் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் - Yarl Voice தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு துணிவாக குரல் கொடுத்தவர் ராஜப்பு ஜோசப் - யாழ் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் - Yarl Voice

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு துணிவாக குரல் கொடுத்தவர் ராஜப்பு ஜோசப் - யாழ் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்
யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் இரங்கல் செய்தி  

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவரும் மன்னார் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயருமான மேதகு கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் மறைவு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மறைமாவட்டங்களின் கத்தோலிக்க மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வரும் தமிழ் இந்து முஸ்லீம் மக்கள் அனைவருக்கும் மிகவும் சோகமான செய்தியாகும்.

அவரின் இறப்புச் செய்தி கேட்டு இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் இருந்து ஓலிக்கும்  அனுதாப மற்றும்; இரங்கல் செய்திகளும் அவரின் இறப்பையொட்டி தழிழர் வாழும் பிரதேசமெங்கும் துக்கம் அனுபவிக்க வேண்டும் என்று பலகோணங்களில் இருந்து எழுப்பப்படுகின்ற வேண்டுகோள்களும் இதற்குச் சான்றாகும்.

1940ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பிறந்து 1967இல் யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் அப்போதைய யாழ் ஆயர் மேதகு கலாநிதி  ஜெ. எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையினால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு மன்னார் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக 1992ஆம் ஆண்டு மறைந்த  புனித திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் நியமனம்  பெற்ற இவர் 2015ஆம் ஆண்டு பணி ஓய்வுக் காலமான 75 வயதை அடைந்த போது எதிர்பாராத சுகவீனம் உற்றமையால் மன்னார் மறைமாவட்டத்தின் தற்காலிக பரிபாலகராகப் பணியாற்றாமலே பணி ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டார்.

2021ஆம் ஆண்டு 81 வயதை நிறைவு செய்யும் இவர் 53 ஆண்டுகள் குருவாகவும் 29 ஆண்டுகள் ஆயராகவும் உள்ளார். இதில் 23 வருடங்கள் மன்னார் மறைமாவட்டத்தில் ஆயர்ப்;பணி ஆற்றியுள்ளார்.

இயல்பாகவே துன்பப்படுவோர் துயரப்படுவோர் வேதனைப்படுவோர் யாரின் உதவியும் இன்றி இருப்போர் வறியயோர் மட்டில் கரிசனை கொண்ட இவர் தனது குருத்துவப் பணியை யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மறைமாவட்டங்களில்  ஆரம்பித்த பின்னர் திருச்சபை சட்டத்துறையில் உரோமையில் கலாநிதிப்பட்டம் பெற்று தன் பணிக்கு வலுச்சேர்த்துக் கொண்டார்.

மன்னார் ஆயராகப் பணியேற்ற பின்னர் தமிழ் மக்களுக்கு எதிரான எல்லா அடக்கு முறைகளுக்கும் அநீதியான செயற்பாடுகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் துணிவாக குரல் கொடுக்கின்ற இவரின் பணி முழு வடிவம் பெற்றது. முன்னாள் போராளிகள் - அரசியல் கைதிகள் - சிறையில் வாடுவோர் - காணமற் போனோர் - வேலையற்றோர் - போரால் பாதிக்கப்பட்டோர் அனைவருக்காகவும் துணிந்து நின்று தம்; உயிரைத் துச்சமென மதித்து குரல் கொடுத்தார்.

 பயங்கரவாதி என்றும் புலிகளின் ஆதரவாளர் என்றும் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடப்பட்ட போதும் அவர் தமது இறை நம்பிக்கையையும் ஆயர்ப் பணியையும் ஆயர்ப்  பதவியையும் பணயம் வைத்தும் முற்று முழுதாகப் பயன்படுத்தியும் தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படும் ஆட்சியாளார்கள் அரசியல்வாதிகள் அதிகாரத்தில் இருப்போர் ஆகியோருக்கு எதிராகத் துணிந்து நின்று குரல் எழுப்பினார்.

ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது - ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் - சிறைப்பட்டோர் விடுதலை அடையவர். - பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் - ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் - ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார் (லூக்காஸ் 4:16 - 19) என்ற  இறைவாக்கினர் எசேயாவின் வசனங்கள் இவரின் வாழ்வின் வழிகாட்டும் வசனங்களாயின.

இவர் அரசியல்வாதி அல்ல இவர் ஒரு ஆன்மீகவாதி. இவர் அரசியல் பேசவில்லை மாறாக அடிப்படை மனித உரிமைகளைப் பற்றியும் முழு மனித விடுதலை பற்றியும் பேசினார் என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

இவர் கத்தோலிக்க சமயத்திற்கும் தமிழ் மக்களுக்கும் ஆற்றிய அளப்பரிய அரும்பெரும் பணிகளுக்காக இறைவனின் இவரை தமது இன்ப சந்நிதானத்தில் அமைதியில் இளைப்பாற அருளுவார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இலங்கையின் எல்லாக் கத்தோலிக்க ஆயர்களும் இணைந்து நின்று மேதகு கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் பூதவுடலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் அடக்கம் செய்கிறோம். இவரின் ஆன்மா இறைவனின் இன்ப சந்நிதானத்தில் அமைதியில் இளைப்பாறட்டும்.

மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை

யாழ் ஆயர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post