தாய்லாந்தில் முகக் கவசம் அணியாத பிரதமருக்கு 37 ஆயிரம் ரூபா அபராதம் - Yarl Voice தாய்லாந்தில் முகக் கவசம் அணியாத பிரதமருக்கு 37 ஆயிரம் ரூபா அபராதம் - Yarl Voice

தாய்லாந்தில் முகக் கவசம் அணியாத பிரதமருக்கு 37 ஆயிரம் ரூபா அபராதம்
தாய்லாந்துப் பிரதமர் முகக்கவசம் அணியாத காரணத்தால் 37000 (இலங்கை) ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அங்கு கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.

கொரோனா வைரசின் புதிய அலையைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரமாக்கி வருகிறது.

அந்த வகையில் நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிவது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் பாங்கொக்கில் மக்கள் எல்லா நேரங்களிலும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணியாதவர்களுக்கு 20 ஆயிரம் பாட் ( 124 ஆயிரம் ரூபா) வரை அபராதம் விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைநகர் பாங்கொக்கில் தடுப்பூசி கொள்வனவு குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா முகக் கவசம் அணியாமல் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரதமரின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, பாங்கொக் நிர்வாகம் அவருக்கு 6 ஆயிரம் பாட் (இலங்கை மதிப்பில் சுமார் 37 ஆயிரம் ரூபா) அபராதம் விதித்தது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் பிரயுத் சான் ஓச்சா மீது பொலிசில் புகார் அளித்துள்ளதாக பாங்கொக் ஆளுநர் அஸ்வின் குவான்முவாங் தெரிவித்தார்.

இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ஆவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வரும் 1ஆம் திகதி முதல் இந்தியப் பயணிகள் தாய்லாந்து வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post