தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தராசு ஆயர் இராயப்பு யோசப் - ஐங்கரநேசன் அஞ்சலி - Yarl Voice தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தராசு ஆயர் இராயப்பு யோசப் - ஐங்கரநேசன் அஞ்சலி - Yarl Voice

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தராசு ஆயர் இராயப்பு யோசப் - ஐங்கரநேசன் அஞ்சலி
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அது கருக்கொண்ட காலம் முதல் கத்தோலிக்க மதகுருமார்கள் 
பலர் காத்திரமான பங்களிப்பைச் செய்து வந்துள்ளனர். இவர்களில் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை 
முதன்மையானவர். தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மதத்தின் குரலாக அல்லாமல் இனத்தின் 
குரலாகவே ஒலித்தவர். 

அதேசமயம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தராசாகவும் 
விளங்கியவர். மதத்தையும் தாண்டிய தனது நடுநிலை தவறாத இனப்பற்றால் தமிழ்த் தேசிய விடுதலைப் 
போராட்டத்தின்பால் சர்வதேசங்களின் பார்வையைக் குவித்தவர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் மறைவு குறித்து பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அஞ்சலிக் குறிப்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், 

ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை நெஞ்சுரம் மிக்கவர். முள்ளிவாய்க்காலில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பாதுகாப்பின் பொருட்டுக் கூடவே சென்ற பிரான்சிஸ் யோசப் அடிகளார் உட்படத் 
தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுக்கொண்ட பல குருமார்கள் காணாமல் ஆக்கப்பட்டமை முன்னுதாரணங்களாக 
உள்ளன. இருந்தபோதும், முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனவழிப்பே என்று சொல்லி சரியான 
புள்ளிவிபரங்களுடன் உலகுக்கு முரசறைந்தவர். 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆயுதப் பலத்தால் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைத்து வைத்திருந்தார். அதன் பின்னர் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தனது ஆன்மீகப் பலத்தால் ஒன்றிணைத்திருந்தார். 

இலங்கைத்தீவின் சிங்கள பௌத்த பேரினவாதம் மென்மேலும் வலுப்பெற்று வரும் இன்றைய சூழ்நிலையில் 
அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். தமிழ்த் தேசியக் கட்சிகள் கருத்தொற்றுமையின் 
அடிப்படையில் ஒரு குடையின் கீழ் அணிதிரள்வதே ஆண்டகைக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக அமையும் 
என்றும் குறிப்பிட்டுள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post