எலிகளைப் பிடிப்பதற்காக வீடுகளில் வளர்க்கப்படும் பூனையைப் புலியென்பதை யாரும் ஏற்கமாட்டார்கள்- சிறிகாந்தா - Yarl Voice எலிகளைப் பிடிப்பதற்காக வீடுகளில் வளர்க்கப்படும் பூனையைப் புலியென்பதை யாரும் ஏற்கமாட்டார்கள்- சிறிகாந்தா - Yarl Voice

எலிகளைப் பிடிப்பதற்காக வீடுகளில் வளர்க்கப்படும் பூனையைப் புலியென்பதை யாரும் ஏற்கமாட்டார்கள்- சிறிகாந்தாஎலிகளைப் பிடிப்பதற்காக வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகளை, அவை புலிகளை ஒத்திருக்கின்றன என்று கூறுவதைப் பாரபட்சமின்றி சிந்திக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர், சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டத்திற்கு விரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “யாழ். மாநகரை சுத்தப்படுத்தும் நோக்கில் காவல்படை அமைக்கப்பட்டதன் சூழ்நிலையிலேயே பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த காவல்படை பற்றி தவறான அல்லது திரிபுபடுத்தப்பட்ட வியாக்கியானத்தின் அடிப்படையில் மாநகர முதல்வர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நாம் கருதுகின்றோம்.

ஏனெனில், காவல்படை என்ற பெயருடன் ஐந்து மாநகர ஊழியர்களை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட குறித்த காவல்படையை, அதன் நோக்கங்கள், பணிகள் என்பவற்றின் அடிப்படையில் ஒரு பொலிஸ் படையாக ஒருபோதும் கருத முடியாது.

நகரின் சுகாதார மேம்பாட்டினைப் பிரதான நோக்கமாகக் கொண்ட இந்தக் குழுவுக்குச் சூட்டப்பட்டிருக்கும் தமிழ் பெயரினை அடிப்படையாக வைத்து அதனை ஓர் பொலிஸ் படையாக அர்த்தப்படுத்துவது என்பது தவறானதாகும்.

எமது நாட்டில் ‘பொலிஸ் சேவை’ மற்றும் ‘பொலிஸ் நிலையம்’ என்பவற்றிற்கு தமிழில் முறையே ‘காவல் துறை’ மற்றும் ‘காவல் நிலையம்’ என்ற சொல் உத்தியோகபூர்வமாகப் பிரயோகிக்கப்படுவதில்லை. ‘பொலிஸ்’ என்ற ஆங்கிலச் சொல்லே பயன்படுத்தப்படுகின்றது.

இதேவேளை, காவல் படைக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து மாநகர சபை பணியாளர்களில் எவருக்கும் வழக்கமாக பொலிஸாருக்கு வழங்கப்படும் எந்தவொரு பயிற்சிநெறியும் அளிக்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு ஓர் குண்டாந்தடி கூட எவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை.

அத்துடன், தனியார் பாதுகாப்புச் சேவை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சீருடைகளை ஒத்த விதத்திலேயே இந்த மாநகர சபை ஊழியர்களின் சீருடைகளும் அமைந்திருந்தன.

மேலும், இந்த அமைப்பினை நிறுவியதன் மூலம் சட்ட ஏற்பாடுகள் எவையாவது மீறப்பட்டிருந்தால் சாதாரண சட்டத்தின் கீழ் அரசாங்கம் தாராளமாக நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். மாறாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இந்த விவகாரத்தில் அரசாங்கம் பிரயோகித்திருப்பது நீதியான நடவடிக்கை அல்ல.

இந்நிலையில், இந்த விவகாரத்தை முழுமையாக மீள் பரிசீலனை செய்து எந்தவொரு சட்ட மீறலும் நிகழ்த்தப்பட்டிருப்பதாக அரசாங்கம் கருதுமானால் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக சாதாரண சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

எலிகளைப் பிடிப்பதற்காக வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகளை, அவை புலிகளை ஒத்திருக்கின்றன என்று கூறுவதைப் பாரபட்சமின்றி சிந்திக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்“ என்று அவர் கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post