கட்டாய இடமாற்றத்தை ஆசிரியர்கள் ஏற்க வேண்டாம் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் - Yarl Voice கட்டாய இடமாற்றத்தை ஆசிரியர்கள் ஏற்க வேண்டாம் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் - Yarl Voice

கட்டாய இடமாற்றத்தை ஆசிரியர்கள் ஏற்க வேண்டாம் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
கட்டாய இடமாற்றத்தை ஆசிரியர்கள் ஏற்க வேண்டாம்  என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 ஆசிரிய இடமாற்ற சுற்றறிக்கைக்கு மாறாக ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது சட்டவிரோதமானது. இதனை ஆசிரியர்கள் ஏற்கத்தேவையில்லை. 

 சில வலயக்கல்விப் பணிப்பாளர்கள் தமக்குத் தேவையானவர்களுக்கு அவர்கள் விரும்புகின்ற பாடசாலைகளை வழங்குவதற்காக ஏனைய ஆசிரியர்களை கட்டாய இடமாற்றம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற 2007/20 எனும் இலக்கம் கொண்ட சுற்றறிக்கையிலோ, தாபன விதிக்கோவையிலோ எந்த ஏற்பாடுகளும் இல்லை. 

இவ்விடயம் பல ஆசிரியர்களுக்கு தெரிந்திராததால் வலயக் கல்விப்பணிப்பாளர்களின் தன்னிச்சையான தொழிற்பாடுகள் ஆசிரியர்களைப் பாதிக்கின்றன. அத்தோடு சில அதிகாரிகளுக்கு இதன் விளைவுகள் என்னவென்பதும் புரியாதுள்ளது. இதற்காக பொருத்தமில்லாத கடிதங்களை அனுப்புகின்றனர். அதில் கட்டாயமாக இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என வற்புறுத்தப்படுகின்றது. 

இதற்காக தற்போதுள்ள அபாயகரமான சூழ்நிலையில் இடமாற்ற விண்ணப்பப்படிவம் பூர்த்திசெய்ய பாடசாலைக்கு வருகைதருமாறு சில அதிபர்கள் ஆசிரியர்களை வற்புறுத்துவதாகவும், தமக்கு விருப்பமில்லாதவர்களை கட்டாய இடமாற்றம் செய்ய முனைவதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

 ஆகையால் ஆசிரிரியர்கள் உங்கள் சுயவிருப்பின்றி இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கவோ அன்றி வற்புறுத்தல்களுக்கு அஞ்சவோ தேவையில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

 இதற்கு மேலதிகமாக தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள் இருப்பின் அது இடமாற்ற சபைமூலம் நிவர்த்தி செய்யப்படும் என்பதும், பற்றாக்குறையான இடங்களுக்கு ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும்போது இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தேசிய ஆசிரிய இடமாற்ற சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறே செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். 

 இதனை ஏனைய ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். என்றும் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post