முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு வலி. மேற்கு பிரதேச சபையில் அஞ்சலி! -எதிராக கருத்துரைத்தனர் ஈ.பி.டி.பியினர்- - Yarl Voice முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு வலி. மேற்கு பிரதேச சபையில் அஞ்சலி! -எதிராக கருத்துரைத்தனர் ஈ.பி.டி.பியினர்- - Yarl Voice

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு வலி. மேற்கு பிரதேச சபையில் அஞ்சலி! -எதிராக கருத்துரைத்தனர் ஈ.பி.டி.பியினர்-
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு வலி.மேற்கு பிரதேச சபையில் இன்று {21} வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில்  நினைவேந்தல் இடம்பெற்றது.

தவிசாளர் த.நடனேந்திரனின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

அரசியலுக்காகவும் ஊடகங்களில் பிரச்சாரப்படுத்துவதற்காகவுமே இவ்வாறான நினைவேந்தல்கள் இடம்பெறுவதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

படையினர் வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறார்கள். அதேபோன்று நினைவேந்தல் செய்யும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க முன்வரவேண்டும் எனவும் மேற்படி கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேற்படி கட்சி உறுப்பினர்கள் சிலர் மெழுகுதிரிகளை கையில் ஏந்தி நினைவேந்தலில் பங்கெடுத்திருக்கவில்லை. 

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு எதிராக ஏனைய உறுப்பினர்கள் காரசாரமாக கருத்துரைத்தனர்.

இறுதிவரை முள்ளிவாய்க்காலில் இருந்து அவலங்களைச் சந்தித்த உறுப்பினர்களான திருமதி சுபாஜினி, து.சுஜிந்தன் ஆகியோர் தாம் சுமந்த வலிகளை வெளிப்படுத்தி உரையாற்றியதுடன் அந்த மக்களுக்கான நினைவேந்தலை கொச்சைப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர்.

இங்கே இடம்பெற்றது இனப்படுகொலை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என உறுப்பினர் தே.றஜீவன் தெரிவித்தார்.

எமது சிறுவர்களும் இளைஞர்களும் திட்டமிட்டு போதைவஸ்துக்கு அடிமையாக்கப்பட்டு எமது வரலாற்றை மழுங்கடிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

எனவே, ஊடகங்களிலும் முகப்புத்தகங்களிலும் நினைவேந்தலை வெளிப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. எமது வரலற்றை அடுத்த சந்ததிக்கு கடத்துவதற்கு இது முக்கியமானது எனவும் அவர் தெரிவித்தார்.

அரசோடும் படையினருடனும் இணைந்து மக்களை கடத்தி, காணாமல் போகச் செய்து, இளைஞர்களை படுகொலை செய்தவர்கள் தங்களை நியாயப்படுத்த முடியாது என உறுப்பினர் ந.பொன்ராசா தெரிவித்தார்.

ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண். எனவே தங்களின் செய்திகளை வெளிப்படுத்தவில்லை என்பதற்காக யாரும்  ஊடகங்களை புறமொதுக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

மக்களை படுகொலை செய்த அரசாங்கத்துடன் அன்று இணைந்திருந்து யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியாத அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா மக்களுக்கு உதவி செய்தார், செய்கிறார் எனக் கூறுவது அர்த்தமற்றது என உறுப்பினர் சி.இதயகுமாரன் தெரிவித்தார்.

தாங்களும் தமிழ் மக்களின் பிரதிநிகளே எனவும் தமது உறவினர்களும் யுத்தத்தில் இறந்தனர் எனவும் கருத்துக்கூறிய ஈ.பி.டி.பி  உறுப்பினர்களான சி.பாலகிருஷ்ணன் மற்றும் துவாரகாதேவி ஆகியோர் நினைவேந்தலை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது எனவும் தெரிவித்தனர்.

இதேவேளை முள்ளிவாய்காலில் இருந்து வெளியேற்றப்பட்டு முள்ளுக் கம்பிகளுக்குள் அடைபட்டிருந்த மக்களுக்கு உதவிய ஒரேயொரு அரசியல்வாதி டக்ளஸ் தேவானந்தா மட்டுமே என உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறினார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் சரியானவை என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் கு.குணசிறி தெரிவித்தார்.

தனது குடும்பமும் இழப்புக்களை சந்தித்தது எனவும் முள்ளிவாய்க்காலை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post