இனப்படுகொலை நினைவேந்தலை மீண்டும் படுகொலை செய்திருக்கின்றது இலங்கை அரசாங்கத்தின் ஆசி பெற்ற அரச இயந்திரம்-சிவசக்தி ஆனந்தன் - Yarl Voice இனப்படுகொலை நினைவேந்தலை மீண்டும் படுகொலை செய்திருக்கின்றது இலங்கை அரசாங்கத்தின் ஆசி பெற்ற அரச இயந்திரம்-சிவசக்தி ஆனந்தன் - Yarl Voice

இனப்படுகொலை நினைவேந்தலை மீண்டும் படுகொலை செய்திருக்கின்றது இலங்கை அரசாங்கத்தின் ஆசி பெற்ற அரச இயந்திரம்-சிவசக்தி ஆனந்தன்




முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியை உடைத்தும் அதன் நினைவுக் கல்லை அகற்றிய செயற்பாடானது இன்னொரு இனப் படுகொலையை செய்வதற்கு சமமானது என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை இடித்து அழித்த சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் சட்டங்களிலும் இலங்கையின் அரசியல் அமைப்பிலும் மரணித்தவர்களை நினைவு கூருவது என்பது அடிப்படை உரிமையாக குறித்துரைக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் பொழுது அந்த அடிப்படை உரிமையை கூட தடுத்து நிறுத்தும் ஒரு நிலமைதான் தற்போது அரங்கேறியுள்ளது.

நாட்டில் உள்ள இராணுவ நிர்வாகமானது  ஜனநாயகத்திற்கான அனைத்து வழிகளையும் முடக்கும் செயற்பட்டை செய்துவருகின்ற நிலையில் தற்போது யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூருவதற்கான வழியையும் முடக்கி ஒட்டுமொத்தமாக தமிழ் இனத்தின் மீதான அடக்கு முறையை அரசாங்கம் பிரயோகிக்கின்றமை அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

தமிழர்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக போராடுகின்றார்கள் என்ற புரிதலை இனியாவது சர்வதேச நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

அடக்கு முறைகள் ஊடாக தமிழ் இனத்தின் அனைத்து உரிமைகளையும் பறித்து தமிழினத்தை அடிமைகளாக வைத்திருக்கும் இந் நிலமையை சர்வதேச நாடுகள் உணர்ந்து கொண்டு பாதிக்கபட்ட தரப்பிற்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு இனியாவது முன்வரவேண்டும். ஏனென்றால் சர்வதேச நாடுகள் முன்னிலையிலே எத்தனையோ வாக்குறுதிகள் தரப்பட்டதுடன் அந்த தரப்புக்களும் தமிழர் தரப்பிற்கு எத்தனையோ அறிவுரைகளை வழங்கி விட்டுக்கொடுப்புக்களை செய்யும் படி கூறியிருந்தார்கள் அந்த அப்படையில் அவர்களும் இதற்கு பொறுப்பாளிகள் தான்.

மரணித்தவர்களுக்கான நினைவேந்தேலை தடை செய்யும் விடயமானது நீதிக்காக போராடும் இனத்தை ஒட்டு மொத்தமாக இல்லாமல் செய்யும் செயற்பாடு என்பதுடன் இன்னொரு இன அழிப்பிற்கான முயற்சியாகவும் இது பார்க்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post