இடைக்காலத் தடைக் காலத்திற்குரிய கொடுப்பனவை கொரோனா நிவாரண பணிக்கு ஒதுக்கினார் முதல்வர் மணிவண்ணண் - Yarl Voice இடைக்காலத் தடைக் காலத்திற்குரிய கொடுப்பனவை கொரோனா நிவாரண பணிக்கு ஒதுக்கினார் முதல்வர் மணிவண்ணண் - Yarl Voice

இடைக்காலத் தடைக் காலத்திற்குரிய கொடுப்பனவை கொரோனா நிவாரண பணிக்கு ஒதுக்கினார் முதல்வர் மணிவண்ணண்



யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன்  நீதிமன்றத்தினால் யாழ் மாநகர சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை காலத்திற்கு உரிய  கொடுப்பனவை தற்போதைய கொரோனாக்கால நிவாரண பணிக்கு ஒதுக்கியுள்ளார்.

அந்த இடைக்காலத்தில் பாராளுமன்ற தேர்தல் காலம் மற்றும் தொலைபேசி கொடுப்பனவுகள் என்பன தவிர்த்து கிடைக்கப்பெற்ற  438,000 ரூபா பணத்தையே கொரோனாக்கால  நிவாரண பணிக்கு ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த உள்ளூராட்சி  தேர்தல் மூலம் யாழ்.மாநகர சபையில்   கிடைக்கப்பெற்ற ஆசனங்கள் ஊடாக விகிதாசார அடிப்படையில் தமிழ் தேசிய மக்கள்  முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் கட்சியினால்  தேர்ந்தெடுக்கப்பட்டு மாநகர சபை உறுப்பினரானார்.

மாநகர  சபை உறுப்பினராக கட்சியினால் நியமிக்கப்பட்டு ஓரிரு மாதத்தில், யாழ்ப்பாண  மாநகர சபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவரை உறுப்பினராக தேர்ந்தெடுத்தமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல். எனவே அகில  இலங்கை தமிழ் காங்கிரஸால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபை  உறுப்பினர் வி.மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி  கட்டளையிடவேண்டும் எனக் கோரி  மாநகர சபை எல்லையில் வதியும் வாக்காளர்  ஒருவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேன்முறையீட்டு  நீதிமன்றில் நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்தார்.  

குறித்த மனு மீதான விசாரணைகளை அடுத்து மணிவண்ணன் சபை அமர்வுகளில் பங்கெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்து மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.

தேர்தல்  காலத்தில் கட்சிக்கும் மணிவண்ணனுக்கு இடையில் காணப்பட்ட உட்பூசல்கள்  தேர்தல் முடிவடைந்த பின்னர் பகிரங்கமானது. 

இந்நிலையில் மணிவண்ணனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து   நீக்குவதாக அறிவித்தனர். அத்துடன் மணிவண்ணனுடன் சேர்ந்தவர்களையும் நீக்குவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முடிவெடுத்தனர்.

மணிவண்ணனை  நீக்குவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்ததை அடுத்து நாடாளுமன்ற  உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேன்முறையீட்டு  நீதிமன்றில் மணிவண்ணன் மாநகர சபை உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என  தொடர்ந்த மனுவை கடந்த வருடம் ஒக்டோபர் 13ஆம் திகதி மீள பெற்றுக்கொண்டார். அதனால்  மணிவண்ணன் மீண்டும் மாநகர சபை உறுப்பினராக சபை அமர்வுகளில் கலந்து  கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post