மாகாண வைத்தியசாலைகளை சுவீகரிப்பது அதிகார பரவலாக்கலை கேலிக்கூத்தாக்கும் செயல் - புளொட் தலைவர் சித்தார்த்தன் கண்டனம் - Yarl Voice மாகாண வைத்தியசாலைகளை சுவீகரிப்பது அதிகார பரவலாக்கலை கேலிக்கூத்தாக்கும் செயல் - புளொட் தலைவர் சித்தார்த்தன் கண்டனம் - Yarl Voice

மாகாண வைத்தியசாலைகளை சுவீகரிப்பது அதிகார பரவலாக்கலை கேலிக்கூத்தாக்கும் செயல் - புளொட் தலைவர் சித்தார்த்தன் கண்டனம்




மாகாண நிர்வாகங்களுக்குட்பட்ட ஒன்பது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதென எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு அதிகார பரவலாக்கலை கேலிக்கூத்தாக்கும் ஒரு செயல் என புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்  தெரிவித்துள்ளார். 

மாகாண நிர்வாகங்களுக்குட்பட்ட ஒன்பது வைத்தியசாலைகளை பறித்தெடுக்க அரசு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

மாகாண நிர்வாகங்களுக்குட்பட்ட ஒன்பது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான அமைச்சரவை முடிவு நேற்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி, வடமாகாணத்திலிருந்து நான்கு வைத்தியசாலைகள் மத்திய சுகாதார அமைச்சினால் பொறுப்பேற்கப்படவுள்ளது. 

மாகாணங்களின் அதிகாரங்களை சிறிது சிறிதாக பறித்தெடுக்கும் அரசின் இரகசிய நோக்கத்தை இந்த நடவடிக்கை தெளிவாக வெளிக்காட்டுகிறது.

முக்கியமாக வடக்கு கிழக்கிலுள்ள நிறுவனங்களை கையகப்படுத்தி இந்த மாகாண சபைகளை அதிகாரமற்ற அமைப்புக்களாக மாற்றுவதுடன் மாகாண சபைகளையும் செயலிழக்கச் செய்யும் நோக்கமிருக்கிறது. 

இதேபோல தேசிய பாடசாலைகளை உருவாக்கி மாகாண கல்வியமைச்சை செயலிழக்கச் செய்து, கையகப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. 

அரசின் இந்த நடவடிக்கை அதிகார பரவலாக்கலை கேலிக்கூத்தாக்குவதுடன், இனப்பிரச்சினை தீர்விற்கு தாம் தயாரில்லையென்ற செய்தியையே வெளிப்படுத்துகிறார்கள். 

இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post