இந்தியா தன்னுடைய தார்மிக கடமையில் இருந்து விலகி இருக்கின்றதா?-சிவசக்தி ஆனந்தன் - Yarl Voice இந்தியா தன்னுடைய தார்மிக கடமையில் இருந்து விலகி இருக்கின்றதா?-சிவசக்தி ஆனந்தன் - Yarl Voice

இந்தியா தன்னுடைய தார்மிக கடமையில் இருந்து விலகி இருக்கின்றதா?-சிவசக்தி ஆனந்தன்



தற்பொழுது மேற்கத்தேயம் தமிழ் மக்களுடைய பிரச்சினையை கையாண்டு அதன் மூலம் ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஒரு கடிவாளத்தை போடுவதற்கு யோசிக்கலாம். ஆனால் மேற்குலகம் மறுபடியும் ஒரே தவறை செய்கின்றது. அனைத்து தமிழ் தரப்புடனும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தி அதற்குரிய செயற்திட்டங்களை வகுக்காமல் தனியே கூட்டமைப்புடன் அவர்கள் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்கள் என்று தெரிவித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழர்கள் விடயத்தில் இந்தியா இறுக்கமான நடவடிக்கை எடுப்பதற்கு பின்னடிப்பதானது இந்தியா தன் தார்மிக கடமையில் இருந்து விலகி இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது என்று  தெரிவித்தார்.

1.பசில் ராஜபக்சவின்; வருகையை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

யுத்த வெற்றி வாகையினாலும் பௌத்த சிங்களவாதத்தின் ஆதரவுடன் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பெற்ற அரசாங்கம் பொருளாதாரத்தின் வீழ்ச்சி காரணமாக அந்தநிலையை நிலை நிறுத்தி கொள்ள முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.

ராஜபக்ஸாக்கள் மீது கட்டியமைக்கபட்ட சிங்களபௌத்த வாதமும் கழுவிச் செல்லப்படுகின்ற நிலையில் ராஜபக்ஸ குடும்பம் அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதற்காக பசில் ராஜபக்ஸ என்ற நபரை அரசாங்கத்திற்குள் கொண்டு வந்து அவரை ஒரு பொருளாதார மீட்பாளர் என்ற விம்பத்தை அவர் மீது ஏற்படுத்த முனைந்திருக்கின்றார்கள்.

இச் செயற்பாடானது தென்னிலங்கையில் ஏற்பட்டு இருக்கின்ற அதிர்ச்சிகளை களைவதற்கும்  தங்கள் அதிகாரங்களை நீடித்து இரண்டாவது தடவையாகவும் தாங்கள் வெற்றி பெறுவதற்குமான முயற்சியாகவும் இது இருக்கின்றது.

அடுத்த மாதத்திற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை அரசு செலுத்த வேண்டும்.  ஏற்கனவே டொலர் கொள்வனவுகளை செய்யமுடியாமல் பங்களாதேஸ் இந்தியா போன்ற நாடுகள் ஊடாக டொலர் பரிமாற்றத்தை செய்து கொண்டிருக்கின்ற இலங்கை தற்போது இறக்குமதிகளையும் நிறுத்தி வைத்திருக்கும் நிலையில் டொலரின் அதிகரிப்பும் வேகமாக செல்லப்போகின்றது. இது பொருளாதார ரீதியாக பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்  திறைசேரியிலும் தங்கத்தின் சேமிப்பு இல்லாத நிலையில் தான் இறுதியாக ஐந்தாயிரம் ரூபா நாணயத்தாள் அச்சிடப்பட்டிருந்தது. இவ்வறான முறையற்ற நிதி முகாமைத்துவத்தின் ஊடாக நாடு சென்று கொண்டிருக்கும் போது பசில்ராஜபக்ஸ என்ற ஒரு தனிநபர் இவ்வளவு விடயத்தையும் சரி செய்து பொருளாதாரத்தை மீட்பார் என்றால் அது ஜனாதிபதியினதும் பிரதமரினதும் இயலாமையே

2.பசில்ராஜபக்சவுடன் இராஜதந்திர தரப்புக்கள் தொடர்ச்சியாக சந்திப்புக்களை நடத்திவருகிறது இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு?

சீனாவின் எல்லையற்ற நகர்வு அதாவது தென்னிலங்கையை மையப்படுத்திய தனது திட்டங்களை வகுத்து வந்த சீனா இன்று வடக்கு கிழக்கு நோக்கி அகலக்கால் வைக்கின்ற நிலமையில் இலங்கையை கேந்திரமுக்கிய வதிவிடமாக கருதுகின்ற அமெரிக்கா,இந்தியா மற்றும் அஸ்ரேலியா ஜப்பான் போன்ற நாடுகள்  சீனாவின் வேகமான நகர்வை கட்டுப்படுத்த முயற்சிகளை எடுக்கின்றார்கள் அதன் ஒரு படிதான் ராஜதந்திரிகள் பசில்ராஜபக்சவை சந்திப்பதற்கான காரணம்.

அதாவது இலங்கைக்கு இருக்கும் நிதி நெருக்கடிகளை கடன்களாக அல்லது நன்கொடைகளாக வழங்குவதன் ஊடாக இலங்கையின் நிதி நெருக்கடிக்கு தற்காலிக தீர்வை வழங்கி கொண்டு அதே நேரத்தில் சீனாவை கட்டுப்படுத்தலாம் என ராஜதந்திர தரப்புக்கள் முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். இது தற்காலிக நலனே தவிர நிரந்த தீர்வு இல்லை பசில்ராஜபக்சவின் பின்னணியில் ராஜதந்திர தரப்புக்கள் இருக்கும் என்று கூற முடியாது அதேபோல் பசில்ராஜபக்சவும் எந்தவொரு இடத்திலும் நாங்கள் சீனாவை விட்டு முற்றுமுழுதாக வெளியேறிவிட்டோம் என்று சொல்வதற்கும் அவர் தயார் இல்லாத நிலையில் தான் இருக்கின்றது.

ஏனென்றால் சீன கம்யூனிஸ்ட் கட்சி போன்று இலங்கை பொதுஜன பெரமுனவை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைதான் அவர் செய்து வருகின்றார்  அப்படியான ஒருவர் முற்று முழுதாக சீனாவை விட்டு வெளியேறி மேற்கு நோக்கி திரும்பிவிட்டார் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்பொழுது மேற்கத்தேயம் தமிழ் மக்களுடைய பிரச்சினையை   கையாண்டு அதன் மூலம் ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஒரு கடிவாளத்தை போடுவதற்கு யோசிக்கலாம் ஆனால் மேற்கு உலகம் மறுபடியும் ஒரே தவறை செய்கின்றது அனைத்து தமிழ் தரப்புடனும் ஒரு பேச்சுவார்த்தை நடாத்தி அதற்குரிய செயற்திட்டங்களை வகுக்காமல் தனியே கூட்டமைப்புடன் அவர்கள் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்கள் ஏற்கனவே நாங்கள் கூட்டமைப்புடன் இருக்கும்போதும் சரி வெளியேறியபிறகும் சரி வெளிப்படை தன்மை இல்லாதது தான் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. ஏற்கனவே பலசந்தர்ப்பங்களில்  துருப்பு சீட்டான பலவிடயங்களை கூட்டமைப்பு தவறவிட்டிருக்கும் நிலையில் மறுபடியும்; ராஜதந்திர தரப்புக்கள் கூட்டமைப்பை கையாளுகின்ற நிலமையில் புதிய அரசியலமைப்பு பற்றிதான் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள் இவையெல்லம் நடைமுறைசாத்தியமற்ற விடயத்தை பற்றிபேசுவதாகத்தான் தெரிகிறது.

3.புதிய அரசியலமைப்பு தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற சித்தாந்தத்தில் இருக்கின்ற இந்த அரசாங்கம் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு அரசியல் அமைப்பை கொண்டுவரும் என்று எதிர்பார்க்க முடியாது ஏனெனில் அவர்கள் ஆட்சிக்கு வரும்போதே இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்று ஒன்றும் இல்லை என்று கூறியவர்கள் அப்படிப்பட்டவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் அமைப்பை கொண்டு வருவார்களா என்பது சந்தேகமே ஒரு வேளை கொண்டுவந்தாலும் மாகாண சபை அதிகாரத்தை மலிதாக்கி பெரும்பாண்மை கட்சிகள் அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதற்கான தேர்தல் முறைகளை மாற்றித்தான் அரசியல் அமைப்பை கொண்டுவருவார்கள் இவ்வாறு இருக்கையில் புதிய அரசியல் அமைப்பை நம்பி எல்லா விடயங்களையும் கைவிட்டு ஏமாறுவதற்கு இடமளிக்க கூடாது

4.சீனாவின் ஆதிக்கம் மாகாண சபை முறையில் உள்ள அதிகாரங்கள் சிலவற்றில் மத்திய அரசாங்கம் கைவைக்கும் நிலை என்று சில விடயங்கள் இடம்பெறுகின்ற சூழ்நிலையில் இந்தியா தொடர்ந்தும் மௌனம் காப்பதாக ஒரு பார்வை இருக்கின்றது அது தொடர்ப்பில் உங்களுடைய நிலைப்பாடு?

தங்களது தெற்குவாயிலை சீனா கட்டுவதற்கான நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலும் இந்தியா அமைதியாக இருக்கின்றது. தொடர்ந்தும் தமிழர்கள் விடயத்தில் இந்தியா இறுக்கமான நடவடிக்கை எடுப்பதற்கு பின்னடிப்பதானது இந்தியா தன் தார்மீக கடமையில் இருந்து விலகி இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.  

5.கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு தனியான ஒரு சட்டம் இயற்றப்படுவது தொடர்பாக நாட்டில் கல்விச் சமூகம் போராடி வருகின்றது.இது தொடர்பில்...

கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு தனியான ஒரு சட்டம் இயற்றப்படுவது ஒரு பொருத்தமற்ற செயற்பாடு கொத்தலாவல பல்கலைக்கழகம் இதுவரைகாலமும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்த சட்டங்கள் தான் அங்கும் கடைப்பிடிக்கபட்டு வந்தது அப்படி இருக்கையில் திடீர் என்று கொத்தலாவெல பல்கலைக்கழகத்திற்கு ஒரு விசேட சட்டம் கொண்டுவருவது இலவச பல்கலைக்கழக கல்வியை இராணுவமயமாக்குகின்றது என்பதோடு இதை ஒரு இராணுவ பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது.

ஏற்கனவே கொத்தலாவெல பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற பல அதிகாரிகள் இந்த அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். அதோடு இப் பல்கலைக்கழகத்திலிருந்து  கல்விகற்று உயர்கல்விக்காக சீனாவிற்கு சென்று திரும்பியுள்ள மாணவர்கள் கொத்தலாவெல பல்கலைக்கழகத்தின் பழையமாணவர் சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

 இதனூடாக சீனாவிற்கும் கொத்தலாவெல பல்கலைக்கழத்திற்குமிடையிலான பாதுகாப்பு விடயங்கள் மேலும் வலுப்பெறுகின்ற ஆபத்தும் இருக்கின்றது.இவ்வாறன விடயங்கள் பூகோள ரீதியாக பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தும் மேலும் சிவில் நிர்வாகத்துக்குள் எதிர்காலத்தில் இராணுவத்தை உட்புகுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாகவும் இதை கொள்ளலாம் ஏற்கனவே சிவில் நிர்வாகத்திற்குள் முன்பள்ளிகளில் இருந்து உயர்பதவிகள் வரைக்கும் தற்சமயம் இராணுவத்தில் இருப்பவர்களும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளும் புகுத்தப்பட்டிருப்பது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படுவதற்கான ஆபத்தும் உள்ளது.

6.கௌதாரிமுனை கடலட்டை பண்ணை தொடர்பான விவகாரம் அண்மைக்காலமாக பேசுபொருளாகி உள்ளது இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

வடபிராந்தியத்தில் மேலும் கடலட்டை பண்ணைகள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக தெரிகிறது இதில் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் உள்ளுர் கடற்தொழிலாளர்களுக்கு கடலட்டை பண்ணை உருவாக்கி தருவதாக சொல்கிறார் அதே நேரத்தில்  கௌதாரிமுனையில் சீனா கடலட்டை பண்ணை உருவாக்கியிருப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் அனுமதி கொடுத்தது என்று கூறினார்  பின்னர் நேரில் பார்த்துவிட்டு கூறுவதாக கூறினார் தற்பொழுது கடலட்டை பண்ணை தொடர்பாக விசம பிரச்சாரங்கள் செய்ய வேண்டாம் என்று மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றார்.

 உள்ளுர் கடற்றொளிலாளர்களின் எதிர்ப்புக்களை தவிர்ப்பதற்கு அந்த தொழிலாளர்களுக்கு பண்ணை அமைப்பதற்கு அனுமதிபத்திரம் வாங்கித்தருவதாக கூறுகின்றார் இந்த கடலட்டை பண்ணைகளுக்கு அனுமதி வழங்கும் நிறுவனம்; முறையாக எல்லாவற்றையும் வழங்கியிருந்தால் அமைச்சருக்கு முதலில் அனைத்தும் தெரிந்திருக்கும். அல்லது இவ்விடயம் அமைச்சரின் கட்டுப்பாட்டை மீறி நடைபெறுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது


 
 

0/Post a Comment/Comments

Previous Post Next Post