திருச்சி மன்னார்புரம் சிறப்பு முகாமில் 18 ஈழத் தமிழர்கள் கூட்டாக தற்கொலை செய்து கொள்ள எடுத்துக் கொண்ட முயற்ச்சி உலகத்தமிழர்களை பெரிதும் துயரிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர கோரிக்கை யொன்றினை விடுத்துள்ளது.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அளவுகதிகமான தூக்க மாத்திரைகளை உண்டும், ஒருவர் வயிற்றை கிழித்தும், இன்னொருவர் கழுத்தை அறுத்தும், இருவர் தூக்கிட்டுக் கொண்டும் தற்கொலை முயற்சி மேற்கொண்டிருப்பதான செய்திகளும், காட்சிகளும் பெரும் வேதனையினை ஏற்படுத்தியுள்ளது.
நீண்டகாலமாக இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இவர்கள், தாங்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தண்டனை காலம் முடிந்தும் தங்களை மேலும் சிறையில் அடைத்து வைத்துள்ளதாகவும் கூறி வருவதோடு, கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ்நாட்டு அரசின் சார்பாக அகதிகள் மறுவாழ்வுத் துறை ஆணையர் அவர்கள் சென்னையிலிருந்து இச் சிறப்பு முகாமிற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சந்தித்திருந்ததோடு, 20 நாட்களில் விடுதலை செய்யவதென வாக்குறுதி அளித்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இவைகள் பலன் அளிக்காததான் காரணமாகவே இவர்கள் கூட்டாக தற்கொலை செய்ய முயற்சித்திருப்பதானது பெரும் கவலையினை உலகத்தமிழர்களிடையே ஏற்படுத்தியுள்ள விடுதலையினை உறுதிசெய்ய வேண்டுகின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment