ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தீர்க்கப்படுவதற்கான உத்தரவாதமொன்றை அரசு உடன் வழங்க வேண்டும் - கஜேந்திரகுமார் எம்பி வலியுறுத்து - Yarl Voice ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தீர்க்கப்படுவதற்கான உத்தரவாதமொன்றை அரசு உடன் வழங்க வேண்டும் - கஜேந்திரகுமார் எம்பி வலியுறுத்து - Yarl Voice

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தீர்க்கப்படுவதற்கான உத்தரவாதமொன்றை அரசு உடன் வழங்க வேண்டும் - கஜேந்திரகுமார் எம்பி வலியுறுத்துஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தீர்க்கப்படுவதற்கான உத்தரவாதமொன்றை அரசு உடன் வழங்க வேண்டும்.

வடக்கு கடலில் இந்திய மீனவர்களால் தமிழ் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்படுவதும் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதும் உடன் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( எம்பி)

இன்று 05-08-2021 வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய உரையின் சாராம்சம் வருமாறு.

எனக்கு மிக குறுகிய நேரமே வழங்கப்பட்டு இருப்பதால் , சில விடயங்களை சுருக்கமாக சொல்ல விளைகிறேன்..

கொரோனோ தொற்றினால் நாடு ஒரு பொருளாதார சிக்கலில் இருக்கும் போது ஆசிரியர்கள் சம்பள உயர்வுக்கு போராடிவது நியாயமற்றது என சிலருக்கு தோன்றலாம் .

ஆனால் ஆசிரியர்கள் அப்படி ஒரு நியாமற்ற ,யதார்த்தமற்ற கோரிக்கையை முன்வைத்து போராடவில்லை. இந்த கோவிட் பெருந்தொற்றுக்கால பொருளாதார நெருக்கடிக்குள் தமது ஊதிய உயர்வை உடனடியாக தருமாறு கூட அவர்கள் கேட்கவில்லை.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினை தீர்ப்பதற்கான உத்தரவாதத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
உங்களது அரசாங்கமே 2001 ஆம் ஆண்டு நியமித்த சுபோதினி ஆணைக்குழுவினால் பிரேரிக்கப்பட்ட ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினை தீர்ப்பதற்கான உத்தரவாதத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

நீங்கள் நியமித்த அந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நியாயமானவை என்பதை ஏற்று அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவாதமொன்றையே அவர்கள் கேட்கிறார்கள்.

அவர்களின் கோரிக்கைக்கு இந்த அரசாங்கம் உடனடியாக செவிசாய்த்து நியாயமான முறையில் அணுக வேண்டும். அந்த உத்தரவாதத்தை உடனடியாக வழங்க வேண்டும். அதன் மூலம் இந்த பிரச்சினையை இலகுவாக முடிவுக்கு கொடுவரலாம்.

அடுத்த விடயம்

வடக்கு கடற்பரப்பில் நிகழ்ந்துவரும் ஆபத்தான நிலமைகுறித்து இந்த சபையின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

கடந்த சில காலமாக, குறிப்பாக ஜூலை 22 ம் திகதி முதல் இந்திய மீனவர்கள் பாரிய ட்ரோலர் படகுகளில் சிறிலங்கா கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்து வருகிறார்கள்.

இந்த றோலர்கள் எமது மீனவர்களின் மீன்பிடி வலைகளை வெட்டியும் உபகரணங்களை உடைமைகளையும் அழித்து வருகின்றார்கள்.
குறிப்பாக மன்னார் முதல் யாழ்ப்பாணம் ஊடாக முல்லைத்தீவு வரையான தமிழ் மீனவர்கள் இதனால பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

ஒரு சிறிய உதாரணத்தை இங்கு முன்வைக்கிறேன்.

கடந்த ஜூலை 22 ம் திகதி வடமராட்சி கொட்டடி கடற்தொழிலாளர் சங்கத்தினைச் சேர்ந்த 27 தமிழ் மீனவர்களின் 40 லட்சம் ருபா பெறுமதியான 277 வலைகள் உட்பட மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. பருத்துத்தித்துறை முனை கடற்றொழிலார் சங்கத்தினை சேர்ந்த அந்த குறுகிய மீன்பிடிக்கான பகுதியில் மட்டும் ஏறத்தாழ நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்திய ட்ட்றோலர்களால் தும்பளை கிழக்கில் இருந்து கொட்டடி வரைக்குமான பகுதிகளில் அந்த ஒரே நாளில் இந்திய ட்றோலர்களால் ஏறத்தாழ 15 மில்லியன் ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அழிவுகள் ஓரிரு நாட்கள் அல்ல, ஒவ்வொரு நாளும் எமது கடற்பரப்பில் நடந்துகொண்டிருக்கிறது. அப்படியாயின் வடக்கு கிழக்கில் என்ன நடந்துகொண்டிருக்கிறது.

வடக்கு கிழக்கு கரையோரம் முழுவதும் கடலை பாதுகாப்பது எனும் பெயரில் எமது மக்களின் நிலங்களை அபகரித்து பாரிய கடற்படை முகாம்களை அமைத்து வைத்திருக்கிறீர்கள்.
ஆனால் எமது மக்களின் உடமைகள் அழிக்கப்படுகின்றன. எமது மக்களின் வளத்தையும் உடமைகளையும் அழிக்கும் வெளிநாட்டு ஊடுருவல்களை தடுக்க முடியாவிட்டால், கடற்படை உண்மையில் என்ன செய்து கொண்டிருக்கிறது? அப்படியாயின் கடற்படை என்ன நித்திரையா கொள்கிறது?

இந்த அரசு இப்படியாக தமிழ் மீனவர்களின் வலைகளும் மீன்பிடி உபகரணங்களும் அழிக்கப்படுவதை வேண்டுமென்றே இந்த அரசு அனுமதிக்கிறதா எனும் கேள்வி எழுகின்றது.

ஒரு புறம் எமது மக்களின் வாழ்நிலங்களை ஆக்கிரமித்து முகாம்களை அமைத்து அவர்களை நிலமற்றவர்களாக ஆக்கிக்கொண்டு மறுபுறம், அதே மக்களும் அவர்களது உடமைகளும் அழிக்கப்படுவதையும் அனுமதித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

இது ஒரு மிக மோசமான ஒரு செயற்பாடு என்பதை இங்கு வெளிப்படுத்த விரும்புகிறேன்.

அது மட்டும் அல்ல,
கடல் அட்டை பண்ணைகள் பாரிய அளவில் வடக்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.

பாரிய அளவில் அவற்றை அமைப்பதற்கான அனுமதியையும் வழங்கிவருகிறார்கள். இதன் மூலம் அந்த பிரதேசத்தின் கடற்படுக்கை மீன்பிடி, முழுமையாக அழிக்கப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது.

அதன் மூலம் எதிர்கால மீன்ன்பிடித்தொழில் மிகக்கடுமையாக பாதிப்புகளை எதிர்கொள்ளநேரிடும்.
உண்மையில் எமது மீனவர்கள் இருபுறத்தாலும் ஒடுக்கப்படுகின்ற அச்சத்தில் வாழ்கிறார்கள் .

ஒரு புறம் கடந்த 32 வருட போரிற்கு பின்னர் தற்போது தான் சிறிது சிறிதாக எழுந்து தமது சொந்த கால்களில் நிற்க முற்படுகின்ற மீனவர்களின் உடமைகளும் உபகரணங்களு, எமது கடற்பரப்புக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களினால் அழிக்கப்படுகின்றன.

மறுபுறமாக அபிவிருத்திக்கு அனுமதிப்பது எனும் பெயரில் பாரிய அளவில் கடலட்டை பண்ணைகளை அனுமதிப்பதன் மூலம் எமது கடற்படுக்கைகள் அழிக்கப்பட்டு, எமது மீனவர்களின் மீன்வளத்தை அழிக்கிறீர்கள்.

வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தின் ஏறத்தாள அரைப்பங்கு மீன்வளத்தில் தங்கிகியிருக்கின்ற நிலையில், இப்படியான செயற்பாடுகளுக்கு இடம்கொடுப்பதானது, சிறிலங்கா அரசானது எமது மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வறுமைப்படுத்துவதன் மூலம் எமது மக்களை கடற்கரை பிரதேசத்தில் இருந்து , அவர்களது சொந்த வாழ்நிலத்தில் இருந்து , அவர்களது தொழில் நிலத்தில் இருந்து அவர்களை தாங்களாகவே வெளியேற்ற நிர்ப்பந்திக்கிறதா எனும் கேள்வியை எழுப்புகின்றது.

அதன் மூலம் அந்த வளமான பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் நாசகார செயற்திட்டத்தை மேற்கொள்ள் முனைகிறதா எனும் சந்தேகம் எழுகிறது.

எனவே இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நான் இந்த அவையை கேட்டுக்கொள்கிறேன்.
அத்தோடு, எமது கடற்பரப்புக்குள் ஊடுருவி, எமது மக்களின் சொத்துக்களை அழிக்கும் இந்திய ரோலர்களிடமிருந்து பாதுகாப்பு கொடுக்கமுடியாவிடின், இந்த கடற்படை எமது மண்ணில் இருந்து வெளியேறட்டும். எமது கடலை பாதுகாப்பதை எமது மக்கள் பார்த்துக்கொள்வார்கள் .

0/Post a Comment/Comments

Previous Post Next Post