நாட்டை முடக்குவதானால் அன்றாட உழைப்பாளருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - மனோ எம்பி அவசர வேண்டுகோள் - Yarl Voice நாட்டை முடக்குவதானால் அன்றாட உழைப்பாளருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - மனோ எம்பி அவசர வேண்டுகோள் - Yarl Voice

நாட்டை முடக்குவதானால் அன்றாட உழைப்பாளருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - மனோ எம்பி அவசர வேண்டுகோள்

  

நாட்டை மூடுவதானால், கொழும்பு மாவட்ட மாநகர பிரதேசங்களை சார்ந்த அன்றாட உழைப்பாளர்களுக்கு, தினக்கூலி தொழிலாளர்களுக்கு, மத்தியதர வர்க்க ஊழியர்களுக்கு வாராந்த நிதி அல்லது உலர் உணவு பொதி  நிவாரணம் வழங்க வேண்டும். அதற்கு அரசு தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். 

கடந்த முறையை போன்று பாராளுமன்றத்திலும், வெளியேயும் கொழும்பு மாவட்ட மக்கள் பிரதிநிதி எம்பீக்களான எங்களையும், நிராதரவாகும் அப்பாவி மாநகர மக்களையும் போராட வைக்க வேண்டாம் என கூறி வைக்க  விரும்புகிறேன். 

இது தொடர்பில் சற்று முன் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் மேஜர் பிரதீப் உதுகொட எம்பியிடம் நான் நேரடியாக தெரிவித்துள்ளேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். 

நாடு முடக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் மனோ எம்பி  இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது, 

மக்களுக்கு நிவாரணம் வழங்க பெருந்தொகை நிதி தேவைப்படும் என்பது உண்மைதான். அதேவேளை குடும்ப தலைவர்களுக்கும், தலைவிகளுக்கும் தங்கள் குடும்பங்களை  கொண்டு நடத்த, பிள்ளைளை வாழவைக்க வேறு வழிகள் இல்லை என்பதை அரசு உணர வேண்டும். 

தடுப்பூசிகள் பெறுவதற்கு பெருந்தொகை நிதி உதவிகள் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை தந்து உதவின. 

பல நட்பு நாடுகள் அன்பளிப்பாக தடுப்பூசிகளை தந்து உதவின. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், நிதி திரட்டப்பட்டுள்ளன.  

குறிப்பாக எந்தவித வழி வாய்ப்புகள் இல்லாமல், வீட்டு தோட்டங்கள் எதுவும் இல்லாமல், கட்டிடங்களுக்கு மத்தியில், வாழும் மாநகர ஏழை மற்றும் மத்திய தர மக்களுக்கு, நாட்டை மூடுவதானால், நிவாரணம் வழங்கியே ஆக வேண்டும். 

இதற்கான நிதியை அரசாங்கம் ஏனைய அபிவிருத்தி, திட்டங்களை இடை நிறுத்தி, திரட்டியே ஆக வேண்டும்.   

ஏற்கனவே விலைவாசி கணிசமாக உயர்ந்து விட்டது. பல பொருட்கள் சந்தையில் இல்லை. இறக்குமதி பொருட்களும் இல்லலை. 

இறக்குமதி வரி குறைக்கபட்டாலும், இறக்குமதியாளர் பொருட்களை இறக்குமதி செய்ய வங்கிகளில் அந்நிய செலாவணி இல்லை. இதுதான் இன்றைய நிலைமை. 

நாடு முடக்கப்பட்ட போது, ரூபா. 5000 வை வாங்கிக்கொண்டு, அதை வைத்து ஒரு மாதம் முழுக்க கொழும்பு மாநகர மக்கள் வாழ வேண்டும் என கடந்த முறை அமைச்சர் விமல்  வீரவன்ச பகிரங்கமாக பாராளுமன்றத்தில் சொன்னார். இக்கருத்து தொடர்பில், நானும், நண்பர் முஜிபுர் ரஹ்மானும்,  விமல்  வீரவன்சவுடன் சபையில் கடும் வாக்குவாதப்பட்டோம். 

பிறகு கொழும்பு மாநகர மக்களுக்கு வாராந்த நிதி மற்றும் உலர் உணவு பொதி  நிவாரணம் வழங்கும் நிலைமை ஏற்பட்டது. அத்தகைய ஒரு நிலைமையை மீண்டும் ஏற்படுத்த வேண்டாமென இந்த அரசாங்கத்தை முன்கூட்டியே எச்சரிக்க விரும்புகிறேன். 

"உலகில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ஆகவே நான் என்ன செய்வது? என கேட்க நிதி அமைச்சர் தேவையில்லை. உலகில் டொலர் பெறுமதி கூடுகின்றது. ஆகவே இலங்கை ரூபா மதிப்பிழக்கின்றது. இப்படி சொல்ல ஜனாதிபதி, பிரதமர் தேவையில்லை. இத்தகைய நெருக்கடியை சமாளிக்க தெரிந்த, கோதபாய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச ஆகிய இலங்கையின் லீ குவான்யூ, மஹதிர் முஹம்மத் ஆகிய  தலைவர்களிடம் ஆட்சியை கொடுத்து விட்டு, தொலைந்து போங்கள்” என சொல்லி ஆட்சியை பிடித்த, இன்றைய அரசாங்கத்துக்கு இதற்கு வழி சொல்ல தெரிய வேண்டும். 

இதை அன்று சொன்ன அமைச்சர் விமல்  வீரவன்ச போன்றோருக்கு  இன்று மக்களுக்கு பதில் சொல்ல தெரிய வேண்டும். 

அரசாங்கம் செய்யும் அனைத்து அபிவிருத்தி, உட்பட ஏனைய எல்லா செலவீனங்களையும் இடை நிறுத்தி, மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தயாராக வேண்டும். 

கொழும்பு மாநகரத்தை முடக்கி, கொழும்பில் வாழும் அன்றாட உழைப்பாளர், தினக்கூலி தொழிலாளர், மத்தியதர வர்க்க ஊழியர் குடும்ப குழந்தைகள், வயோதிபர் உட்பட மக்களை பட்டினி போட  அரசு முயலுமானால், அதை பார்த்துக்கொண்டு  கொழும்பு மாவட்ட எம்பீக்களாகிய  நாம் வாளாவிருக்க மாட்டோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post